மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் கலெக்டர் ஆய்வு
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால் பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட மெரிலேண்ட் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு தார்ச்சாலை பெயர்ந்து உள்ளது. ஊட்டியில் இருந்து குந்தா செல்லும் சாலையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மேட்டுப்பாளையம்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு அருகே மரங்கள் விழுந்தன. பாய்ஸ் கம்பெனி, பிளாக் பிரிட்ஜ் உள்பட பல்வேறு இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டன. மேற்கண்ட பாதிக்கப்பட்ட இடங்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
போர்க்கால அடிப்படையில் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவும், சிறு பாலங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீரமைக்கவும், தேவையான இடங்களில் சிறு பாலங்கள் கட்டவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கீழ்குந்தா மற்றும் உலிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட மேல் பாரதி நகர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள பொதுமக்களை கலெக்டர் சந்தித்து, அவர்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர், உணவு, கழிப்பிடம், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அலுவலர்கள் விரைந்து பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் அப்பகுதியில் மண்சரிவினால் சேதம் அடைந்த வீடுகளுக்கு மாற்றாக வேறு இடங்களில் புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகரும்பாலத்தில் மழையால் சேதம் அடைந்த வீடுகளை கலெக்டர் பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களை அருகே உள்ள நிவாரண முகாமில் சென்று தங்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது தாசில்தார்கள் தினேஷ், சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், ராமன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story