பயிர்க்காப்பீட்டுத் தொகையை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பயிர்க்காப்பீட்டுத் தொகையை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2019 4:30 AM IST (Updated: 24 Oct 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க கோரி தஞ்சையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பன்னீர்செல்வம், கருணாநிதி, கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில், பயிர்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் பாதிப்புக்கு ஏற்ற வகையில் உரிய காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். பயிர்க் காப்பீட்டுத் தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்காமல் விவசாயிகளிடம் நேரடியாக வழங்க வேண்டும்.

தாமதமின்றி

2017-18-ம் ஆண்டில் விடுபட்ட விவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகையை இனியும் தாமதமின்றி வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு பட்டா சிட்டா இதர சான்றுகள் கேட்பதை கைவிட வேண்டும்.

பருவமழை தொடங்கி உள்ளதால் விவசாயிகளின் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும். ஈரப்பதத்தை காரணம் காட்டாமல் கொள்முதல் செய்ய வேண்டும்.

பயிர்க்கடன்

விவசாயிகள் பெரும் கடன் நெருக்கடியில் உள்ளதால் விவசாயிகள் பெற்ற அனைத்து பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் நிர்வாகிகள் சந்திரகுமார், விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

Next Story