இரை தேடி சென்றபோது வாகனம் மோதி 2 மான்கள் சாவு


இரை தேடி சென்றபோது வாகனம் மோதி 2 மான்கள் சாவு
x
தினத்தந்தி 24 Oct 2019 3:45 AM IST (Updated: 24 Oct 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

இரைதேடி சென்றபோது வாகனம் மோதி 2 மான்கள் இறந்தன.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இந்த மலையில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு புள்ளிமான், சருகு மான், மிளா, காட்டுப்பன்றி, காட்டெருமை, சிறுத்தைகள் காணப்படுகின்றன. இந்த மேற்குதொடர்ச்சி மலையில் இருந்து இரைதேடி சாலைகள் இருக்கும் பகுதிக்கு இறங்கி வரும் மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் அந்த வழியாக வரும் வாகனங்களில் அடிபட்டு இறந்து விடும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சாலையை கடந்து சென்ற புள்ளிமான் மீது அந்த வழியாக சென்ற வாகனம் மோதியது. இதில் மான் பரிதாபமாக இறந்து விட்டது. மான் வாகனத்தில் அடிபட்டு இறந்தது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து வனத்துறையினர் வந்து விசாரணை நடத்தினர்.

திருச்சுழி-அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நல விடுதி முன்பு இரைதேடி வந்த புள்ளிமான் வாகனம் மோதியதில் இறந்து கிடந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் வத்திராயிருப்பு வனசரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வத்திராயிருப்பு வனசரக அலுவலர் கோவிந்தன் தலைமையில் வனக்காப்பாளர் ஜெயச்சந்திரன், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு ஆகியோர் வந்து மானின் உடலை மீட்டு திருச்சுழி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குஉடல்கூறு செய்த பின்பு காட்டுப்பகுதிக்கு சென்று புள்ளிமானை அடக்கம் செய்தனர்.

Next Story