தம்பதி கொலை வழக்கில் சிறையில் உள்ள தாய்-மகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு


தம்பதி கொலை வழக்கில் சிறையில் உள்ள தாய்-மகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
x
தினத்தந்தி 23 Oct 2019 11:15 PM GMT (Updated: 23 Oct 2019 7:23 PM GMT)

வெள்ளகோவிலில் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் இருக்கும் கண்ணம்மாளையும், அவரது மகள் பூங்கொடியையும் இன்று (வியாழக் கிழமை) போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளார்கள்.

வெள்ளகோவில்,

திண்டுக்கல் மாவட்டம், ஈசநத்தம் அருகே உள்ள தாசவநாயக்கனூர் பகுதியை சேர்ந்த காளியப்பகவுண்டர் என்பவரது மகன் செல்வராஜ் (50). இவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி வசந்தாமணி (44). இவர்களுக்கு சரண்யா (25 )என்ற மகளும் பாஸ்கர் (27) என்ற மகனும் உள்ளனர். செல்வராஜ் குடும்பத்துடன் மதுரையில் வசித்து வந்தார். செல்வராஜ் மகன் பாஸ்கருக்கு வருகின்ற நவம்பர் 1-ந் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

கடந்த 10-ந்தேதி இரவு எட்டு மணியளவில் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி வசந்தாமணி இரண்டு பேரும் மகன் திருமண பத்திரிகை கொடுக்க வெள்ளகோவில், உத்தண்டகுமாரவலசில் உள்ள அக்கா கண்ணம்மாள் வீட்டுக்கு வந்தனர். சொத்து தகராறு இருந்த நிலையில் சொந்த தம்பியையும், தம்பி மனைவியையும் கொலை செய்து வீட்டின் அருகே புதைத்த கண்ணம்மாள் (54), அவரது மகள் பூங்கொடி (32), மருமகன் ஈரோட்டை சேர்ந்த சதீஸ் என்ற நாகேந்திரன் (35), நண்பர் இளங்கோ (27) ஆகிய 4 பேர்களையும் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நாகேந்திரனின் சகோதரி நாகேஸ்வரி (40) வெள்ளகோவில் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், நான் எனது கணவர் கிருஷ்ணனுடன் பெங்களூருவில் வசித்து வருவதாகவும்,தங்களது தந்தை பெருமாள் இறந்து விட்டதால் எனது தாயார் ராஜாமணி (61), ஈரோடு மூலப்பாளையத்திலுள்ள எனது சகோதரர் நாகேந்திரன் வீட்டில் சில நாட்களும், பெங்களூருவில் உள்ள எங்களது வீட்டில் சில நாட்களும் தங்குவது வழக்கம்.

கடந்த மே மாதம் பெங்களூருவில் இருந்து ஈரோடு வந்த எனது தாயார் ஈரோட்டிலும் இல்லை. எங்கு சென்றார் என்றும் தெரியவில்லை. எனவே தாயாரை கண்டு பிடித்து தருமாறு வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரில் கேட்டுக் கொண்டிருந்தார். இதுகுறித்து விசாரணை செய்வதற்காக கோவை மத்திய சிறையில் இருக்கும் கண்ணம்மாள், அவரது மகள் பூங்கொடி 2 பேரையும் இன்று (வியாழக்கிழமை) போலீஸ் காவலில் எடுத்து அவர்கள் கொலை செய்தார்களா? என விசாரணை நடத்த உள்ளனர். உத்தண்டகுமாரவலசில் உள்ள கண்ணம்மாள் வீட்டிற்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story