மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: தீபாவளியை கொண்டாட சென்ற புதுமாப்பிள்ளை பலி மனைவி உள்பட 4 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: தீபாவளியை கொண்டாட சென்ற புதுமாப்பிள்ளை பலி மனைவி உள்பட 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 24 Oct 2019 4:30 AM IST (Updated: 24 Oct 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில், தீபாவளியை கொண்டாட சென்ற புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

க.பரமத்தி,

கோவை மாவட்டம், கோவிந்தபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 28). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கிருபா (20). இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் தலை தீபாவளி கொண்டாடுவதற்காக ஆறுமுகம் தனது மனைவி கிருபாவை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு நேற்று காலை நாமக்கல் மாவட்டம் காட்டுப்புத்தூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு புறப்பட்டார்.

கரூர் மாவட்டம் தென்னிலையில் உள்ள கிராமநிர்வாக அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே கரூரில் இருந்து பல்லடம் நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கிருபா படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.

4 பேர் படுகாயம்

மேலும் காரை ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள அக்கனம்பாளையத்தை சேர்ந்த மனோஜ்குமார் (24), காரில் இருந்த பல்லடம் அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்த பொன்விக்னேஷ் (20), தாராபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் (24) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து தென்னிலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயமடைந்த கிருபா, மனோஜ்குமார், பொன்விக்னேஷ், செல்வக்குமார் ஆகிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பத்தினர் சோகம்

பின்னர் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக கிருபா மட்டும் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 3 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி கொண்டாட சென்ற புதுமாப்பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story