நெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் நேற்று கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை,
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் நெல்லை கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிற்சங்க செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர்.
ரெயில் நிலையங்களையும், லாபகரமாக இயங்கி வரும் விரைவு ரெயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அமிதாப்காந்த் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியை ரத்து செய்ய வேண்டும். ரெயில்வே துறையில் 33 ஆண்டுகள் பணியாற்றியவர்களை கட்டாய ஓய்வு கொடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ரெயில்வே நிர்வாகம் தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், ரெயில்களை பராமரிக்கும் பணிகளை பன்னாட்டு நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தரைவார்க்க கூடாது.
வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் நலன்கருதி இடமாறுதலை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நிரந்தர வேலைவாய்ப்பை பறித்து, ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட உதவி தலைவர் சுப்பையா, தொழிற்சங்க நிர்வாகிகள் சுவாமிதாஸ், மகராஜன், லட்சுமணபெருமாள் ஆகியோர் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழரசன், ராமசாமி, கவுதம், வேல்முருகன் சிவபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story