3,500 ஏழை பெண்களுக்கு திருமண நிதிஉதவி- தாலிக்கு தங்கம் அமைச்சர் சரோஜா, தளவாய் சுந்தரம் வழங்கினர்


3,500 ஏழை பெண்களுக்கு திருமண நிதிஉதவி- தாலிக்கு தங்கம் அமைச்சர் சரோஜா, தளவாய் சுந்தரம் வழங்கினர்
x
தினத்தந்தி 24 Oct 2019 4:30 AM IST (Updated: 24 Oct 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் 3,500 ஏழை பெண்களுக்கு திருமண நிதிஉதவி மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவற்றை அமைச்சர் சரோஜா, தளவாய் சுந்தரம் ஆகியோர் வழங்கினர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட சமூக நலத்துறை மூலம் ஏழை பெண்களுக்கு திருமண நிதிஉதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம்் வழங்கும் விழா நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி வரவேற்று பேசினார். குமரி மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன் வாழ்த்தி பேசினார்.

விழாவில் தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் சரோஜா, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் ஏழை பெண்களுக்கு திருமதாலிக்கு தங்கம் ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினர்.

அப்போது அமைச்சர் சரோஜா கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தமிழக அரசு துறைதோறும் செயல்படுத்தி இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. முதன்மை மாநிலம் என்று சொல்லும் வகையில் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு சிறப்பாக கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது.

11¾ லட்சம் பேர் பயன்

இன்று படித்த பட்டம் பெற்ற பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் திருமண நிதி உதவியும், 8 கிராம் தங்கமும், பட்டதாரி அல்லாத பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் திருமண நிதிஉதவியும், 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் 2011-ம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை மொத்தமாக 11 லட்சத்து 86 ஆயிரம் பேர் பயன் அடைந்திருக்கிறார்கள். இதில் பட்டதாரி பெண்கள் 4 லட்சத்து 91 ஆயிரத்து 611 பேரும், பட்டதாரி அல்லாதோர் 6 லட்சத்து 94 ஆயிரத்து 673 பேரும் ஆவர்.

தற்போது இந்த திட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 721.31 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் மூலம் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் பயன் அடைய உள்ளனர்.

அழிக்க முடியாத திட்டங்கள்

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவை நினவாக்கும் வகையில் குமரி மாவட்ட மக்கள் அனைத்து வளங்களையும், நலன்களையும் பெற்று மகிழ்வோடு வாழ வேண்டும். ஜெயலலிதா கொண்டு வந்த எல்லா திட்டங்களுக்கும் நிரந்தர திட்டங்களாக, யாராலும் அழிக்க முடியாத திட்டங்களாக, கல்வெட்டுக்களாக அமைந்து உள்ளது.

இவ்வாறு அமைச்சர் சரோஜா பேசினார்.

தொலைநோக்கு பார்வை

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூறியதாவது:-

திருமண நிதி உதவி திட்டத்துடன், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க. மட்டுமல்ல, பயன்பெறும் குடும்பங்கள் மட்டுமல்ல இந்த நாடே மறைந்த ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளை பெற்றவர்கள் தங்களுடைய பிள்ளையை எப்படி திருமணம் செய்வது? தாலிக்கு எப்படி தங்கம் வாங்குவது? திருமணத்தை எப்படி நடத்துவது? என்ற சிந்தனைகளை எல்லாம் அறிந்த ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையோடு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தளவாய் சுந்தரம் பேசினார்.

இந்த விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதி, ராஜாக்கமங்கலம், அகஸ்தீஸ்வரம், தோவாளை ஆகிய 3 வட்டார பகுதிகளை் சேர்ந்த 1029 ஏழை பெண்களுக்கு திருமண நிதிஉதவியும், தலா 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்துரு, மனோகரன், வக்கீல் ஜெயகோபால், அழகேசன், சுகுமாரன், பூங்கா கண்ணன், லதா ராமச்சந்திரன், சந்திரன், பாக்கியலெட்சுமி, திமிர்த்தியூஸ், ஆர்.ஜே.கே.திலக் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி நவாஸ்கான் தொகுத்து வழங்கினார்.

அழகியமண்டபம்

பின்னர் அழகியமண்டபத்தில் நடந்த விழாவில் 2,471 ஏழை பெண்களுக்கு திருமண நிதிஉதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் சரோஜா வழங்கினார். இதன் மூலம் நேற்று குமரி மாவட்டத்தில் மொத்தம் 3,500 பேருக்கு நிதிஉதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டது.

Next Story