வியாசர்பாடியில் மளிகை கடையில் 40 பவுன் கொள்ளை


வியாசர்பாடியில் மளிகை கடையில் 40 பவுன் கொள்ளை
x
தினத்தந்தி 24 Oct 2019 3:45 AM IST (Updated: 24 Oct 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

வியாசர்பாடியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, ரூ.1 லட்சம் மற்றும் மளிகை பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி நியூ மேக்சின் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 43). இவருடைய மனைவி அருணாதேவி. வீட்டின் மாடியில் வசிக்கும் இவர்கள், கீழ் தளத்தில் மளிகை கடை வைத்து உள்ளனர்.

செல்வம், காலையிலேயே கடைக்கு வந்துவிடுவார். பிள்ளைகள் பள்ளிக்கு சென்றபிறகு அருணாதேவியும் கடைக்கு வந்துவிடுவார். இதனால் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் பாதுகாப்பு கருதி மளிகை கடையில் உள்ள சின்ன பீரோவில் 40 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் வைத்து இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கணவன்-மனைவி இருவரும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று தூங்கிவிட்டனர். நேற்று காலை அவர்களது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் செல்வத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அவர் வந்து பார்த்தபோது, நேற்று முன்தினம் நள்ளிரவில் இரும்பு கம்பியால் கடையின் ஷட்டர் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ.1 லட்சம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் உள்ளிட்ட மளிகை பொருட் களை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இதுபற்றி வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story