சேலத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்


சேலத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 24 Oct 2019 4:15 AM IST (Updated: 24 Oct 2019 3:32 AM IST)
t-max-icont-min-icon

சேலத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று இரவு நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜூ, ஆர்.ஆர்.சேகரன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், துணை செயலாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசியதாவது:-

உற்சாக வரவேற்பு

சேலம் மாநகர் மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பன்னீர்செல்வம் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) இரவு கோவையில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு வருகிறார். எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் தங்குகிறார். பின்னர் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வரும் முதல்-அமைச்சரை கட்சி நிர்வாகிகள் அனைவரும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

முதல்-அமைச்சரின் உழைப்புக்கு கிடைத்த பரிசாக தற்போது டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் பட்டம் பெற்று முதல்முறையாக சேலத்திற்கு வரும் அவருக்கு நாம் அனைவரும் உற்சாகமாக வரவேற்பு அளிக்க வேண்டும். வரவேற்பு நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். நாளை காலை 9 மணிக்கு சேலம் 3 ரோடு அருகே வரலட்சுமி மகாலில் நடக்கும் பன்னீர்செல்வம் இல்ல திருமண விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களை நேரில் வாழ்த்துகிறார்.

உள்ளாட்சி தேர்தல் பணி

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனால் சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். இதற்காக அனைவரும் கடுமையாக தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், பகுதி செயலாளர்கள் சண்முகம், சரவணன், யாதவமூர்த்தி, கூட்டுறவு வங்கி தலைவர்கள் சதீஸ் குமார், பெரியபுதூர் கண்ணன், வேபிரிட்ஜ் ராஜேந்திரன், ஜான் கென்னடி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நடந்த கூட்டத்தில் சேலத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 

Next Story