ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருந்துகள் இல்லை - அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருந்துகள் இல்லை - அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 Oct 2019 4:30 AM IST (Updated: 24 Oct 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருந்துகள் இல்லை என்று அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டி உள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் விட்டுவிட்டு தொடர் மழை பெய்து வருவதால் கழிவுநீர் வாய்க்கால் உடைப்பு, சாலை உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஏழை, எளியோர் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் குப்பை கூளங்கள் வாரப்படாமல் அழுத்தம் ஏற்பட்டு கொசு உற்பத்தி அதிகமாகி உள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக தலைவலி, காய்ச்சல், இருமல், சளி தொல்லை, வாந்திபேதி என ஆரம்பித்து டெங்கு, மலேரியா போன்ற விஷக்காய்ச்சலால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆங்காங்கே பல இடங்களில் தொடர் தொற்றுநோயால் மக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஏற்படும் பருவநிலை மாற்றத்தை கணக்கில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசு எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

அரசு பொது மருத்துவமனை மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருந்துகள்இருப்பு இல்லாமல் உள்ளது. அரசு மருத்துவமனையில் அதிகப்படியான படுக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை. இந்தநிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நிலவேம்பு குடிநீர்கூட அரசிடம் தயார் நிலையில் இல்லை. எனது தொகுதி குடிசைகள் நிறைந்த தாழ்வான பகுதி என்பதாலும், கழிவுநீர் வாய்க்காலின் மையப்பகுதியாக இருப்பதாலும் மக்கள் பல்வேறு நோய்களின் உபாதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதை அரசு அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று நிலவேம்பு குடிநீர் வழங்குமாறு கேட்டதற்கு அரசிடம் போதிய கையிருப்பு இல்லை என்று தெரிவிக்கிறார்கள். இது மிகவும் வேதனையான விஷயம்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

இந்தநிலையில் உப்பளம் தொகுதி மக்களுக்கு வாணரப்பேட்டை, ராசுஉடையார்தோட்டம், பிரான்சுவாதோட்டம், திப்புராயப்பேட்டை, உடையார்தோட்டம், அவ்வைநகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவேம்பு குடிநீரை அன்பழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Next Story