பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை ஏரி, குளங்கள், கிணறுகள் நிரம்புகின்றன


பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை ஏரி, குளங்கள், கிணறுகள் நிரம்புகின்றன
x
தினத்தந்தி 24 Oct 2019 11:00 PM GMT (Updated: 24 Oct 2019 3:48 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் ஏரி, குளங்கள்,கிணறுகள் நிரம்பி வருகின்றன.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவியது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. விவசாய பணிகளும் வெகுவாக குறைந்தன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருவதால் மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குன்னம் தாலுகாவில் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கீழப்பெரம்பலூர், வடக்கலூர் ஆகிய 2 ஏரிகள் நிரம்பின.

மேலும் பெரம்பலூர், செட்டிகுளம், பாடாலூர், அகரம்சீகூர், லப்பைக்குடிகாடு, புதுவேட்டக்குடி, எறையூர், கிருஷ்ணாபுரம், தழுதாழை, வி.களத்தூர், வேப்பந்தட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள், கிணறுகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், விவசாய பணிகளும் தொடங்கி உள்ளன. தண்ணீர் நிரம்பியுள்ள ஏரி, குளம், கிணறுகளில் சிறுவர்கள், இளைஞர்கள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு சில ஏரிகள் இன்னும் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், அந்த ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தே காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த ஏரிகளையும் அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகரம்சீகூரில் 90 மில்லி மீட்டர் மழை

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பெரம்பலூர்-12, செட்டிகுளம்-21, பாடாலூர்-54, அகரம்சீகூர்-90, லப்பைக்குடிகாடு-75, புதுவேட்டக்குடி-4, எறையூர்-4, கிருஷ்ணாபுரம்-41, தழுதாழை-19, வி.களத்தூர்-17, வேப்பந்தட்டை-42.


Next Story