சம்பளம் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகை
சம்பளம் வழங்காததை கண்டித்து ஆரணி நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.
ஆரணி,
ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 1 முதல் 18 வார்டுகளுக்கு தனியார் துப்புரவு பணியாளர்களை கொண்டு 116 தொழிலாளர்கள் மேற்பார்வையில் துப்புரவு பணி மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள வார்டுகள் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
கடந்த 6 மாத காலமாக தனியார் துப்புரவு பணியாளர்களுக்கு சரிவர சம்பளம் நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனியார் துப்புரவு பணியாளர்களின் வருகை பாதியாக குறைந்தது. நகரில் எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 மாத சம்பள பாக்கியை ஒரே நேரத்தில் வழங்கப்பட்டது. மீதமுள்ள நிலுவை சம்பளத்தை தொழிலாளர்கள் அதிகாரிகளிடம் கேட்டு வந்தனர்.
இந்த நிலையில் தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என தனியார் துப்புரவு பணியாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர், பொறியாளர், அலுவலக மேலாளர் வெளியில் சென்றிருந்தனர்.
இதுதொடர்பாக அலுவலகத்தில் இருந்தவர்கள் ஆணையாளருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். தற்போது நான் ஊரில் இல்லை, வசூல் ஆனதும் உடனடியாக சம்பளம் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story