லால்பேட்டையில் சாலையில் தேங்கிய மழைநீரில் மீன்களை விட்டு போராட்டம்


லால்பேட்டையில் சாலையில் தேங்கிய மழைநீரில் மீன்களை விட்டு போராட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2019 4:00 AM IST (Updated: 24 Oct 2019 11:45 PM IST)
t-max-icont-min-icon

லால்பேட்டையில் சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் மீன்களை விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டுமன்னார்கோவில், 

லால்பேட்டையில் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந் நிலையில் முறையான பராமரிப்பின்றி அந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும், சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லால்பேட்டையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர்.

இதனால் சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் அக்கட்சியினர் லால்பேட்டையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ், செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், குமராட்சி ஒன்றிய செயலாளர் மூர்த்தி, நிர்வாகிகள் அப்துல்அஜிஸ், ஜெயக்குமார் மற்றும் இவர்களுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் நகர செயலாளர் பரமசிவம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வில்லியம்ஸ், அந்தோணிசிங் உள்ளிட்டோர் சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் மீன்களை விட்டு, கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்த தகவலின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் திருநாவுக்கரசு, கிராம நிர்வாக அலுவலர் ரவி ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் சாலையை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story