குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Oct 2019 3:30 AM IST (Updated: 24 Oct 2019 11:45 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி வடலூரில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வடலூர், 

வடலூர் ஆர்.சி.காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மின்மோட்டார் பழுதானதால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மதியம் காலி குடங்களுடன் அதே பகுதியில் உள்ள சாலைக்கு திரண்டு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த வடலூர் போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், தங்கள் பகுதியில் 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் உடனே குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். செல்போன் கோபுரம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றனர்.

அதற்கு அதிகாரிகள், இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story