தொடர் மழை காரணமாக ஊட்டி-தீட்டுக்கல் சாலை சேதம்; வாகன ஓட்டிகள் அச்சம்
தொடர் மழை காரணமாக ஊட்டி-தீட்டுக்கல் சாலை பெயர்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரியில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வந்தது. இதனால் நெடுஞ்சாலைகளில் மரங்கள் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும், பாறைகள் உருண்டு விழுந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. அதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது. மின்வாரிய அணைகளில் நீர்மட்டம் முழுக்கொள்ளளவை எட்டியதால், அதன் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தொடர் மழை பெய்ததால் வெளிமாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கிறது.
இதற்கிடையே ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் ஊட்டி- தீட்டுக்கல் சாலை பெர்ன்ஹில் பகுதியில் ஒருபுறத்தில் மண்சரிவு ஏற்பட்டு சாலை பெயர்ந்தது. நாளுக்கு நாள் சாலை மோசமாகி வருவதால் அந்த வழியாக வாகனங்களை ஓட்டி செல்ல வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். மறுபுறத்தில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அதில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலை பெயர்ந்து உள்ளதாலும், குழியாக இருப்பதாலும் சாலையின் அகலம் குறைந்து காணப்படுகிறது.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலை உள்ளது. மேலும் சாலை எப்போது வேண்டுமானாலும் முழுவதுமாக பெயர்ந்து விழுந்து பேராபத்து ஏற்படும் நிலையில் காட்சி அளிக்கிறது. அதனால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து குருத்துக்குளி, தீட்டுக்கல், மேல்கவ்வட்டி, பார்சன்ஸ்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்களின் டிரைவர்கள் கடும் சிரமத்துடன் அப்பகுதியை கடந்து சென்று வருகின்றனர். அந்த வழியாக ஊட்டி நகராட்சி வாகனங்கள் தினமும் குப்பைகளை சேகரித்து தீட்டுக்கல் குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றன. கர்நாடகா அரசுக்கு சொந்தமான தோட்டக்கலை பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பெரும் விபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே, சாலை பெயர்ந்த இடத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகளை அடுக்க நடவடிக்கை எடுப்பதோடு, சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story