துடியலூர் அருகே, லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு


துடியலூர் அருகே, லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
x
தினத்தந்தி 24 Oct 2019 10:45 PM GMT (Updated: 24 Oct 2019 6:15 PM GMT)

துடியலூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

துடியலூர், 

கோவையை அடுத்த துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையம் காளியம்மாள் காலனியை சேர்ந்தவர் ஜெயசீலன். இவருடைய மகன் ரூபன் வெஸ்லி (வயது 28). இவர் கோவை-திருச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் ரூபன் வெஸ்லி நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலைக்கு சென்றார். பின்னர் அங்கு வேலை முடிந்து, நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் வெள்ளக்கிணர் பிரிவு அருகே சென்றபோது, முன்னாள் சென்ற லாரி திடீரென திரும்பியது. இதனால் மோட்டார் சைக்கிளை நிறுத்த அவர் பிரேக் போட்டார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட ரூபன் வெஸ்லி, தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், விபத்து குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ரூபன் வெஸ்லியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் லாரியை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவரை கைது செய்தனர்.

Next Story