முன்னாள் எம்.பி. விஜய்சங்கர் பா.ஜனதாவில் சேருகிறார்? மைசூரு மாவட்ட காங்கிரசில் பரபரப்பு
முன்னாள் எம்.பி. விஜய்சங்கர் பா.ஜனதாவில் சேர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மைசூரு மாவட்ட காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மைசூரு,
முன்னாள் எம்.பி. விஜய்சங்கர் பா.ஜனதாவில் சேர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மைசூரு மாவட்ட காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் எம்.பி. விஜய்சங்கர்
மைசூரு நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்.பி. சி.எச்.விஜய்சங்கர். இவர் பா.ஜனதா சார்பில் இந்த தொகுதியில் போட்டியிட்டு 2 முறை எம்.பி.யாக தேர்வாகி இருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் விஜய்சங்கர் பா.ஜனதா சார்பில் டிக்கெட் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக பா.ஜனதா சார்பில் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் சிம்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தேர்தலில் பிரதாப் சிம்ஹா அமோக வெற்றி பெற்றார்.
இதனால் அதிருப்தி அடைந்த விஜய்சங்கர் பா.ஜனதாவில் இருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார். முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் நெருங்கிய ஆதரவாளராகவும் அவர் இருந்தார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் மீண்டும் பிரதாப் சிம்ஹா களமிறங்கினார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் விஜய்சங்கர் போட்டியிட்டார். ஆனால் அவரை வீழ்த்தி 2-வது முறையாக பிரதாப் சிம்ஹா வெற்றி வாகை சூடினார்.
மீண்டும் பா.ஜனதாவில் சேருகிறார்?
இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா சமீபத்தில் மைசூருவுக்கு சென்ற போது, விஜய்சங்கரை சந்தித்து பேசியதாகவும், பா.ஜனதாவில் சேரும்படி அவருக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் முன்னாள் எம்.பி. விஜய்சங்கர் காங்கிரசில் இருந்து விலக இருப்பதாகவும், அவர் மீண்டும் பா.ஜனதாவில் சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மைசூரு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மந்திரி வி.சோமண்ணா கூறுகையில், விஜய்சங்கர் எனது நண்பர் தான். அவர் மீண்டும் பா.ஜனதாவில் சேருவது என்பது நல்ல விஷயம். நாட்டில் தற்போது மோடி அலை வீசுகிறது. எனவே வேறு கட்சியில் இருந்தால், அந்த அலையில் அடித்து செல்லப்படுவீர்கள் என ஏற்கனவே அவரிடம் கூறியிருந்தேன். ஆனால் அவர் பா.ஜனதாவில் சேருவாரா என்பது தெரியவில்லை என்றார்.
பிரதாப்சிம்ஹா எம்.பி. எதிர்ப்பு
முன்னாள் எம்.பி. விஜய்சங்கரை பா.ஜனதாவில் சேர்க்க தற்போதைய எம்.பி.யான பிரதாப் சிம்ஹா ஆட்சேபனை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. மூத்த தலைவரான விஜய்சங்கர் பா.ஜனதாவில் சேர்த்தால், மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என பிரதாப் சிம்ஹா அச்சப்படுவதாகவும், அதனால் விஜய்சங்கர் மீண்டும் பா.ஜனதாவுக்கு வருவதை அவர் விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும் விஜய்சங்கரை பா.ஜனதாவில் சேர்க்க பா.ஜனதாவை சேர்ந்த தலைவர்கள் ஆர்வம்காட்டி வருவதாக கூறப்படுகிறது. தனது நெருங்கிய ஆதரவாளராக இருந்த விஜய்சங்கர் பா.ஜனதாவில் சேர இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் சித்தராமையா அதிர்ச்சியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Related Tags :
Next Story