தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ரூ.3 கோடி மதிப்பிலான அதிநவீன தீயணைப்பு வாகனம்


தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ரூ.3 கோடி மதிப்பிலான அதிநவீன தீயணைப்பு வாகனம்
x
தினத்தந்தி 25 Oct 2019 4:00 AM IST (Updated: 25 Oct 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு புதிதாக ரூ.3 கோடியே 19 லட்சம் மதிப்பிலான அதிநவீன தீயணைப்பு வாகனம் வாங்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு புதிதாக ரூ.3 கோடியே 19 லட்சம் மதிப்பிலான அதிநவீன தீயணைப்பு வாகனம் வாங்கப்பட்டு உள்ளது.

விமான நிலையம்

தூத்துக்குடி விமான நிலையம் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. தூத்துக்குடியில் இருந்து தினமும் சென்னைக்கு 5 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வருகிற 27-ந் தேதி முதல் பெங்களூருக்கு ஒரு விமானம் இயக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையம் விரிவாக்கத்துக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து விரிவாக்க பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இங்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ரூ.4 கோடியே 79 லட்சம் செலவில் அதிநவீன சிக்னல் கருவிகள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளன.

தீயணைப்பு வாகனம்

இதைத் தொடர்ந்து விமான நிலையத்துக்கு அதிநவீன உலகத்தரம் வாய்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனம் வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டு உள்ளது. ரூ.3 கோடியே 19 லட்சம் மதிப்பிலான இந்த வாகனம் ஆஸ்திரியா நாட்டில் இருந்து வாங்கப்பட்டது ஆகும். இந்த தீயணைப்பு வாகனம் 25 விநாடிகளில் 80 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. அதிகபட்சமாக இந்த வாகனம் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இதில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி மற்றும் 1300 லிட்டர் கொள்ளவு கொண்ட ரசாயன நுரை தொட்டிகள் உள்ளன.

எந்தவித சூழ்நிலை ஏற்பட்டாலும் 2 அல்லது 3 நிமிடங்களில் தீயணைப்பு மற்றம் மீட்பு பணியை இந்த வாகனம் மூலம் மேற்கொள்ள முடியும். இந்த வாகனத்தில் 5 பேர் பயணிக்கலாம்.

அதிகாரிகள் பார்வை

இந்த வாகனத்தை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன் முன்னிலையில், தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனத்தின் செயல்பாடுகளை விமான நிலைய தீயணைப்பு பிரிவு மேலாளர் கே.சுரேஷ்குமார் விளக்கினார். கட்டுமான பிரிவு இணை பொதுமேலாளர் ஏ.ராதாகிருஷ்ணன், உதவி பொதுமேலாளர் ஆர்.சுப்ரவேலு, விமான நிலைய மேலாளர் எஸ்.ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

மேலும், விமான நிலையத்தின் சமுதாய பங்களிப்பு திட்டத்தின் கீழ் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நெடுங்குளம் கண்மாயை ரூ.28 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் தூர்வாருவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Next Story