தஞ்சையில், தீபாவளி விற்பனை களை கட்டியது கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்


தஞ்சையில், தீபாவளி விற்பனை களை கட்டியது கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்
x
தினத்தந்தி 24 Oct 2019 11:00 PM GMT (Updated: 24 Oct 2019 6:57 PM GMT)

தஞ்சையில் தீபாவளி விற்பனை களை கட்டியதால் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தஞ்சாவூர்,

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று தீபாவளி பண்டிகை. இந்த பண்டிகை தீபங்களின் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசும், புத்தாடையும், பலகாரங்களும் தான் நினைவுக்கு வரும். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. இதனால் தஞ்சையில் தீபாவளி விற்பனை களை கட்டியது. தஞ்சை காந்திஜிசாலை, அண்ணாசாலை, தெற்கு அலங்கம், தெற்குவீதி, கீழவாசல், பனகல்கட்டிடம் செல்லும் சாலைகளில் ஜவுளிகள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்கள் குடும்பம், குடும்பமாக வந்து தீபாவளிக்கான புத்தாடைகளை வாங்கி சென்றனர். ஆடைகள், காலணிகள், குடைகள் விற்பனைக்காக பல்வேறு பகுதிகளில் தரைக்கடைகள் போடப்பட்டு இருந்தன. தரைக்கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

போலீசார் எச்சரிக்கை

இதேபோல் பட்டாசு கடைகளுக்கு மக்கள் வந்து பட்டாசுகளை அதிகஅளவில் வாங்கி சென்றனர். தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் ஜவுளி எடுப்பதற்காகவும், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காகவும் தஞ்சைக்கு வந்ததால் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள், பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக ஒலிபெருக்கி மூலம் போலீசார் தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

தீபாவளி பண்டிகை தினத்தன்று பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் தீயணைப்பு வீரர்கள், போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பழைய கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை மைதானம் ஆகியவற்றை தற்காலிகமாக கார் நிறுத்தும் இடமாகவும், தாசில்தார் அலுவலக வளாகம், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம் ஆகியவை மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்தினால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம். எனவே இவற்றை கடைபிடிக்க போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் முன்வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story