கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கர்ப்பிணியை கொலை செய்த கணவர் கைது - பெண் உள்பட 2 பேர் சிக்கினர்
வேடசந்தூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கர்ப்பிணியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கள்ளக்காதலி உள்பட மேலும் 2 பேர் சிக்கினர்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வசந்தநகரை சேர்ந்தவர் தினேஷ்குமார். மில் தொழிலாளி. அவருடைய மனைவி சுஷ்மிதா (வயது 20). 9 மாத கர்ப்பிணியான இவர் நேற்று முன்தினம் காலை வேடசந்தூர் அருகே வெரியம்பட்டி-கவுண்டிச்சிபட்டி சாலையோரத்தில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட சுஷ்மிதாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியும் மாயமாகி இருந்தது. இதனால் நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் முதலில் விசாரணையை முடுக்கி விட்டனர்.
இதற்கிடையே தினேஷ்குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சுஷ்மிதாவை தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய திடுக்கிடும் தகவலை அவர் வெளியிட்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
கைதான தினேஷ்குமார், போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கும், சுஷ்மிதாவுக்கும் கடந்த 16.2.2017-ந்தேதி திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்துக்கு முன்பே, திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த அகில்ராஜ் மனைவி பாண்டீஸ்வரி (28) என்பவருக்கும் எனக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. நாங்கள் 2 பேரும், ஒரே மில்லில் வேலை செய்தபோது பழக்கம் ஏற்பட்டது. திருமணத்துக்கு பிறகும் எங்களது தொடர்பு நீடித்தது. நாங்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்தநிலையில் என்னுடைய தம்பி நடராஜனுக்கும், பாண்டீஸ்வரியின் தங்கை ஜெனிதாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தோம். இதற்கு முதலில் சுஷ்மிதா எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பிறகு அவரை சமாதானப்படுத்தினேன். எனது தம்பி திருமணம் தொடர்பாக பாண்டீஸ்வரிடம் பேசுவதற்காக நானும், சுஷ்மிதாவும் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் மேட்டுப்பட்டிக்கு வந்தோம்.
பின்னர் அங்கு பாண்டீஸ்வரியின் மகளுடன் சுஷ்மிதா பேசி கொண்டிருந்தார். அப்போது வீட்டில் உள்ள மற்றொரு அறையில் நானும், பாண்டீஸ்வரியும் நெருக்கமாக இருந்தோம். இதனை சுஷ்மிதா பார்த்து சத்தம் போட்டார். இதனால் நாங்கள் 2 பேரும் அதிர்ச்சி அடைந்தோம். இதனையடுத்து அங்கு கிடந்த நாயின் கழுத்தை கட்ட பயன்படுத்தக்கூடிய ‘பெல்ட்’டால் சுஷ்மிதாவின் கழுத்தை நெரித்தேன்.
சுஷ்மிதாவின் முகத்தில் பாண்டீஸ்வரி தலையணையால் அமுக்கினார். சிறிதுநேரத்தில் மூச்சுத்திணறி சுஷ்மிதா இறந்து விட்டார். பின்னர் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை எடுத்து விட்டு, உடலை வீட்டுக்குள்ளேயே மறைத்து வைத்தோம். தங்க சங்கிலியுடன் வேடசந்தூர் சென்றேன். அதனை அங்குள்ள ஒரு தனியார் வங்கியில் அடமானம் வைத்து ரூ.30 ஆயிரம் பெற்றேன்.
அதனை முன்பணமாக கொடுத்து கார் ஒன்றை வாங்கினேன். அந்த காரில் சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு திண்டுக்கல் வந்தேன். அந்த காரில் சுஷ்மிதாவின் உடலை ஏற்றிக்கொண்டு பாண்டீஸ்வரி, அவருடைய தம்பி பால்பாண்டி (22) ஆகியோருடன் வேடசந்தூர் நோக்கி சென்றேன். கவுண்டிச்சிபட்டி அருகே சாலையோர பள்ளத்தில் உடலை வீசி விட்டு நாங்கள் 3 பேரும் சென்று விட்டோம்.
அடுத்த நாள் காலையில் எனது மனைவி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் தகவல் அறிந்து நானும் அங்கு சென்றேன். கவுண்டிச்சிபட்டியில் உள்ள எனது பெற்றோரை பார்க்க சென்றபோது சுஷ்மிதாவை கொலை செய்து, தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்று விட்டதாக கூறி கதறி அழுவது போல நடித்தேன். இருப்பினும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை பிடித்து விட்டனர்.
இவ்வாறு வாக்குமூலத்தில் தினேஷ்குமார் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த கொலையில் தொடர்புடைய பாண்டீஸ்வரி, அவருடைய தம்பி பால்பாண்டி ஆகியோரை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவின் பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சீமைச்சாமி, தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு பாக்கியராஜ் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த பாண்டீஸ்வரி, பால்பாண்டி ஆகியோரை கைது செய்தனர். மேலும் திண்டுக்கல்லில் இருந்து சுஷ்மிதாவின் உடலை கொண்டு செல்ல பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கர்ப்பிணி மனைவியை கணவரே தீர்த்து கட்டிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story