சிவகிரியில் கோவில் சிலை உடைப்பு சம்பவம்: பெண் உள்பட 5 பேர் கைது


சிவகிரியில் கோவில் சிலை உடைப்பு சம்பவம்: பெண் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2019 4:30 AM IST (Updated: 25 Oct 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் கோவில் சிலை உடைப்பு சம்பவத்தில் பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகிரி, 

சிவகிரி தலையநல்லூரில் புகழ்பெற்ற பொன்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வகையறாவான காளியண்ணன் கோவில் சிவகிரி-கொடுமுடி ரோட்டில் தொப்பபாளையம் என்ற இடத்தில் உள்ளது. இந்த கோவிலில் சிலை அமைப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இதற்கிடையே ஒரு தரப்பினர் கோவிலில் காளியண்ணனுக்கு புதிய சிலை அமைத்தனர், இந்தநிலையில் சம்பவத்தன்று 7 பேர் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி கோவிலுக்குள் நுழைந்து சம்மட்டியால் சிலைகளை அடித்து உடைத்துவிட்டு சென்றார்கள்.

இதுதொடர்பாக சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலை உடைப்பு சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் சிவகிரி அருகே வாங்கலாம்வலசு பகுதியில் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை தடுத்து நிறுத்தினர். அதில் பெண் உள்பட 5 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் ஊஞ்சலூர் அருகே அமராவதிபுதூரை சேர்ந்த மோகனசுந்தரம் (வயது 36), நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கல்லாங்காட்டுவலசு பள்ளிக்காடுவை சேர்ந்த தனியார் நிறுவன காசாளர் சத்தியமூர்த்தி (33), தி்்ங்களூர் குப்பங்காட்டு தோட்டத்தை சேர்ந்த வெங்கடாசலம் (60), சிவகிரி தட்டாம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி (59), அறச்சலூர் நடுப்பாளையத்தை சேர்ந்த கண்ணம்மாள் (50) ஆகியோர் என்பதும், அறச்சலூரில் இருந்து விளக்கேத்திக்கு சென்றதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் 5 பேரும் சிவகிரியில் நடந்த காளியண்ணன் சிலை உடைப்பில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும், சிலையை உடைப்பதற்காக கண்ணம்மாள் வீட்டில் திட்டம் தீட்டியதையும் ஒப்புக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரும் கொடுமுடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story