திருப்பத்தூரில் 218-வது குருபூஜை விழா: மருதுபாண்டியர் சிலைகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர் குருபூஜை விழா நடைபெற்றது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பல்வேறு அரசியல் கட்சியினரும் மரியாதை செலுத்தினார்கள்.
திருப்பத்தூர்,
மாமன்னர்கள் மருதுபாண்டியரின் 218-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு குருபூஜை விழா நேற்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது.
அங்குள்ள மணிமண்டபத்தில் நேற்று காலை 7 மணிக்கு மருதுபாண்டியரின் வாரிசுதாரர் குழுத் தலைவர் ராமசாமி தலைமையில் பொங்கல் வைத்து, மருதுபாண்டியரின் சிலைகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அரசு மரியாதை செலுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், தேசியக் கொடியை ஏற்றி மருதுபாண்டியர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
துணை முதல்-அமைச்சர் ஓ,பன்னீர்செல்வம் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மருதுபாண்டியரின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, பாஸ்கரன் ஆகியோரும், சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான பி.ஆர்.செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ஆவின் தலைவர் அசோகன், பாம்கோ தலைவர் ஏ.வி.நாகராஜன் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம், நகரச் செயலாளர் இப்ராகிம் ஷா, முன்னாள் ஒன்றிய தலைவர் கரு.சிதம்பரம், துணை தலைவர் பத்மநாபன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மூர்த்தி, துணை செயலாளர் முருகேசன், அழகர்சாமி, ராஜா, ராமநாதபுரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் முன்னாள் அமைச்சர் தென்னவன், ஒன்றிய செயலாளர்கள் சண்முக வடிவேல், மாணிக்கம், ஒன்றிய இளைஞர் அணி கண்ணன், உதயசண்முகம், சரவணன், முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நாராயணன், பள்ளத்தூர் ரவி, கான்முகமது உள்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.
ம.தி.மு.க. சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன், மாவட்ட பிரதிநிதி ஏ.சி.முத்து மற்றும் கட்சி பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பா.ஜனதா சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் அந்த கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமஅருணகிரி, சுப்புராம், மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பழனியப்பன், நகர் தலைவர் திருஞானசம்பந்தம், வட்டார தலைவர்கள் பன்னீர்செல்வம், பிரசாந்த், மருது ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
தே.மு.தி.க. சார்பில் பொதுக்குழு உறுப்பினர் உசாலி, மற்றும் அ.ம.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.உமாதேவன், மற்றும் திருப்பத்தூர் அகமுடையார் உறவின் முறையினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தாலுகா குழுத் தலைவர் கல்பனா, முத்துராமலிங்கம், ஆகியோர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.
லெனின் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில செயலாளர் ஸ்டாலின் மற்றும் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். காரைக்குடி மண்டல அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மகாலிங்கம், கருப்பையா, பாலகிருஷ்ணன், அங்குராஜன், முத்துமுனியாண்டி, மாவட்ட கவுன்சிலர் பழனியப்பன் உள்ளிட்டோரும், அகில இந்திய தமிழக மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் பொன்கவி ரஜினிகாந்த் தலைமையில் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கார்த்திக், மாநில நிர்வாக துணை பொதுச் செயலாளர் அருள், நகரச் செயலாளர் அரவிந்த் டெல்டா மாவட்டங்களின் செயலாளர் சுப்பையா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
திருப்பத்தூர் பஸ்நிலையம் அருகில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவு தூணிற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. ரூபேஸ் குமார் மீனா, சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், உதவி இயக்குனர் ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பணராஜவேல், பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கொடி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story