சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 55 ஆயிரத்து 784 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் கவர்னர் வழங்கினார்


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 55 ஆயிரத்து 784 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் கவர்னர் வழங்கினார்
x
தினத்தந்தி 25 Oct 2019 4:30 AM IST (Updated: 25 Oct 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 55 ஆயிரத்து 784 மாணவ, மாணவிகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார்.

சேலம்,

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 19-வது பட்டமளிப்பு விழா நேற்று பெரியார் கலையரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் வரவேற்றதுடன் பல்கலைக்கழகத்தின் பல்வேறு சாதனைகளையும், முக்கிய நிகழ்வுகளையும் எடுத்துரைத்தார்.

விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்த 261 மாணவர்களுக்கும், பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர், முதுகலை மற்றும் இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 95 மாணவர்களுக்கும் தங்கப்பதக்கத்துடன் பட்ட சான்றிதழை வழங்கினார்.

55,784 மாணவ, மாணவிகள்

இதுதவிர சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருக்கும் இணைவு பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 44,497 பேர், பெரியார் பல்கலைக்கழக துறைகளில் படித்த 1,099 பேர், பெரியார் தொலை நிலைக்கல்வி நிறுவனத்தில் படித்த 9,831 பேர் உள்பட மொத்தம் 55 ஆயிரத்து 784 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் பெரியார் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் உயர்கல்வித்துறை முதன்மை செயலர் மங்கத்ராம்சர்மா, பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், தேர்வாணையர்(பொறுப்பு) முத்துசாமி, பத்மவாணி மகளிர் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் சத்தியமூர்த்தி, ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அருள், கல்லூரி செயலாளர் ராஜூ மற்றும் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆட்சிக்குழு, ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காகிதங்களால் ஆடை

முன்னதாக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை வரவேற்கும் விதமாக பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகள் வித்தியாசமாக காகிதங்களால் ஆடை செய்து அவற்றை அணிந்து வரவேற்றனர். இதேபோல் சேலம் விமான நிலையத்தில் கவர்னருக்கு மாவட்ட கலெக்டர் ராமன் புத்தகம் கொடுத்து வரவேற்றார். கவர்னர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story