புதுவை காமராஜ் நகர் தொகுதியில் ஜான்குமார் அபார வெற்றி


புதுவை காமராஜ் நகர் தொகுதியில் ஜான்குமார் அபார வெற்றி
x
தினத்தந்தி 25 Oct 2019 5:00 AM IST (Updated: 25 Oct 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

புதுவை காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் அபார வெற்றி பெற்றார். 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தினார்.

புதுச்சேரி, 

முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் புதுவை காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்த தொகுதி காலியானது.

இந்த தொகுதிக்கு எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுக்க இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தொழிலதிபர் புவனா என்ற புவனேஸ்வரன், முன்னாள் எம்.பி. கண்ணனின் புதிய கட்சியான மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் வெற்றிசெல்வம், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவீனா, சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்டு) கட்சி சார்பில் லெனின்துரை, அகில இந்திய மக்கள் கழகம் சார்பில் கோவிந்தராஜ், மக்கள் விடுதலை கட்சி சார்பில் பார்த்தசாரதி, சுயேச்சையாக சகாயராஜ், சுகுமாறன் ஆகிய 9 பேர் போட்டியிட்டனர்.

இவர்களில் முக்கிய வேட்பாளர்களான ஜான்குமார் (காங்கிரஸ்), புவனேஸ்வரன் (என்.ஆர்.காங்கிரஸ்) ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. ஜான்குமாருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் வீடுவீடாக சென்று வாக்குசேகரித்தனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் புதுவை வந்து பிரசாரம் மேற்கொண்டார். புவனேஸ்வரனுக்கு ஆதரவாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி, அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் ஆகியோர் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

வாக்குப்பதிவு கடந்த 21-ந்தேதி நடந்தது. மொத்தமுள்ள 35 ஆயிரத்து 9 வாக்குகளில் 24 ஆயிரத்து 310 வாக்குகள் பதிவானது. இது 69.44 சதவீதம் ஆகும். கடந்த சட்டமன்ற தேர்தலைவிட குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாயின. இதனால் வெற்றி யாருக்கு? என்பதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இடையே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.

வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளை எண்ண திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 3 தபால் வாக்குகளில் ஒன்றுகூட பதிவாகவில்லை என்பதால் நேரடியாக எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

அனைத்து வாக்குகளும் சுமார் ஒரு மணிநேரத்தில் எண்ணி முடிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை 3 சுற்றுகளாக நடந்தது. ஒவ்வொரு சுற்றுகளிலும் முன்னணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் இறுதியில் வெற்றி பெற்றார். வி.வி.பாட் எந்திரங்களில் இருந்த வாக்குகளை எண்ணி சரிபார்த்தபின் ஜான்குமார் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முதல் சுற்றில் ஜான்குமார் 4 ஆயிரத்து 29 வாக்குகளை பெற்றிருந்தார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 2,092 வாக்குகளை மட்டுமே பெற்றார். 2-வது சுற்றில் ஜான்குமார் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 8,866 ஆக உயர்ந்தது. அப்போது புவனேஸ்வரன் 5,084 வாக்குகள் பெற்றிருந்தார். இறுதி சுற்றில் (3-வது சுற்று) 14,782 வாக்குகள் பெற்று ஜான் குமார் அபார வெற்றிபெற்றார்.

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7,612 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இருவருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் 7,170 ஆக இருந்தது. மற்ற 7 வேட்பாளர்களும் 1000-க்கும் குறைவான வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்தனர்.

டெபாசிட் இழந்தவர்களில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவீனா மட்டுமே நோட்டாவை விட அதிக வாக்குகள் பெற்றிருந்தார். மற்ற வேட்பாளர்கள் நோட்டா பெற்ற வாக்குகளைவிட குறைவான வாக்குகளையே பெற்றிருந்தனர்.

இதையடுத்து காமராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஜான்குமாரிடம் தேர்தல் அதிகாரி முகமது மன்சூர் வழங்கினார். இந்த தொகுதி ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் வசம் இருந்ததாகும். இங்கு மீண்டும் வெற்றி பெற்று இருப்பதன் மூலம் தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துள்ளது.

வெற்றி பெற்ற ஜான்குமாருக்கு முதல் அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பிரமுகர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியே திரண்டிருந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினார்கள். பொதுமக்களும் இனிப்பு வழங்கினர்.

அதேநேரத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதற்கிடையே அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story