விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்


விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 Oct 2019 4:30 AM IST (Updated: 25 Oct 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:-

தீ விபத்து இல்லாமல் தீபாவளியை அனைவரும் கொண்டாடிட வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது கையில் வைத்து கொண்டு வெடிக்க கூடாது. சிறுவர், சிறுமிகளி டம் பட்டாசு மற்றும் மத்தாப்புக்களை கொடுத்து வெடிக்க செய்யும் போது பெரியவர்கள் முன்னிலையில் வெடிக்க செய்ய வேண்டும். குழந்தைகளிடம் தீக்குச்சிகள், மத்தாப்பு பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்களை கொடுத்து விளையாடாதீர்கள். வீட்டிற்குள் பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது.

கையில் எடுக்கக்கூடாது

மிகவும் தளர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசு, மத்தாப்பூ கொளுத்த கூடாது. பட்டாசுகளை கண்ணாடி பாட்டில்கள் மற்றும் தகர டப்பாக்களை கொண்டு மூடி வெடிக்கக் கூடாது. இது ஆபத்தான செயலாகும். பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் தீக்காயங்களுக்கு குளிர்ந்த நீரை தீக்காயத்தின் மீது உடனடியாக ஊற்ற வேண்டும். குழந்தைகளை எரியும் சிம்னி விளக்கில் பட்டாசுகளை கொளுத்த அனுமதிக்காதீர்கள்.

வெடிக்கும் அபாயம் கொண்ட வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் கையில் எடுக்கக் கூடாது. பட்டாசுகளையும், மத்தாப்புகளையும் கூரை வீடுகள், மக்கள் நெருக்கமுள்ள இடங்களிலும், பெட்ரோல் விற்பனை நிலையம், கியாஸ் சிலிண்டர்கள், மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள் ஆகிய இடங்களில் வெடிக்காதீர்கள்.

விபத்தில்லா தீபாவளி

மேலும், மக்கள் அதிகம் கூடும் கடைவீதிகள், பஸ் நிலையம், மருத்துவமனை ஆகிய இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது. அது பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்த அறிவுரைகளை பின்பற்றி விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சேது, நிலைய அலுவலர் மாது மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனிருந்தனர்.

Next Story