ஆட்சியில் சம பங்கு வேண்டும் பா.ஜனதாவிடம் உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
முன்கூட்டியே பேசியதன் அடிப்படையில் மராட்டிய ஆட்சியில் தங்களுக்கு சம பங்கு வேண்டும் என்று பா.ஜனதாவை உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
முன்கூட்டியே பேசியதன் அடிப்படையில் மராட்டிய ஆட்சியில் தங்களுக்கு சம பங்கு வேண்டும் என்று பா.ஜனதாவை உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஆட்சி
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. நேற்று வெளியான தேர்தல் முடிவின் மூலம் மராட்டியத்தில் மீண்டும் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.
பா.ஜனதா தனித்து ஆட்சியை பிடிக்கும் நோக்கில் அதிக எண்ணிக்கையில் 164 தொகுதிகளில் போட்டியிட்டது. சிவசேனாவுக்கு 124 தொகுதிகள் தான் வழங்கப்பட்டன. ஆனால் தேர்தல் முடிவின் மூலம் பா.ஜனதாவின் கனவு பலிக்காமல் போய் விட்டது. தற்போது பா.ஜனதாவின் ‘குடுமி’ சிவசேனா வசம் அகப்பட்டு கொண்டுள்ளது.
அதன்படி ஆட்சியில் சம பங்கு வேண்டும் என்று பா.ஜனதாவை சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
உத்தவ் தாக்கரே
இது தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மராட்டிய தேர்தல் முடிவு பலரது கண்களை திறக்க வைத்து உள்ளது. மராட்டிய மக்கள் ஜனநாயகத்தை உயிர்ப்போடு வைத்து இருக்கிறார்கள். அமித் ஷா என்னுடைய வீட்டிற்கு வந்த போது, பா.ஜனதா, சிவசேனா கூட்டணிக்காக முடிவு செய்யப்பட்ட ‘50:50 பார்முலா’வை நினைவூட்ட வேண்டிய தருணம் இது.
நாங்கள் பா.ஜனதாவை விட குறைந்த இடங்களில் போட்டியிட ஒப்புக் கொண்டோம். ஆனால் ஒவ்வொரு முறையும் பா.ஜனதாவுக்கு இடம் அளிக்க முடியாது. என்னுடைய கட்சியும் வளர நான் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சஞ்சய் ராவத் பேட்டி
இதுபற்றி சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மராட்டியத்தில் ‘50:50 பார்முலா’ அடிப்படையில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும். இது முன்கூட்டியே பேசி தீர்மானிக்கப்பட்ட ஒன்று. இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பார்முலாவை நிறைவேற்றுவது தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் பேசுவார்கள்.
சரத்பவார் தனது அனுபவத்தை கொண்டு மாநிலத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின் காரணமாக எதிர்க்கட்சிகளுக்கு சில வெற்றிகள் கிடைத்து உள்ளன. ஆனால் நாங்கள் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியா?
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைய சாத்தியக் கூறுகள் உள்ளதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதை மறுத்த சஞ்சய் ராவத், “நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தே தேர்தலில் போட்டியிட்டோம். தொடர்ந்து அந்த கூட்டணியில் முன்னேறுவோம்” என்றார்.
மராட்டியத்தில் 50:50 பார்முலாப்படி ஆட்சி அமையும் பட்சத்தில் முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் பா.ஜனதாவும், சிவசேனாவும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இருப்பினும் சிவசேனா வலியுறுத்தும் இந்த பார்முலாவுக்கு பா.ஜனதா சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
ஆதித்ய தாக்கரே
இந்த தேர்தலில் சிவசேனா வரலாற்றில் முதல் முறையாக சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து அவரது பேரன் ஆதித்ய தாக்கரே போட்டியிட்டார். மும்பை ஒர்லி தொகுதியில் களம் இறங்கிய அவர் அமோக வெற்றி பெற்றார்.
கூட்டணி வெற்றி பெற்றால், ஆதித்ய தாக்கரே முதல்-மந்திரி அல்லது துணை முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்று கட்சி வட்டாரத்தில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story