தாராவி சட்டசபை தொகுதியில் 4-வது முறையாக வர்ஷா கெய்க்வாட் வெற்றி


தாராவி சட்டசபை தொகுதியில் 4-வது முறையாக வர்ஷா கெய்க்வாட் வெற்றி
x
தினத்தந்தி 25 Oct 2019 4:45 AM IST (Updated: 25 Oct 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில் 4-வது முறையாக வர்ஷா கெய்க்வாட் வெற்றி பெற்று உள்ளார்.

மும்பை,

தாராவியில் 4-வது முறையாக வர்ஷா கெய்க்வாட் வெற்றி பெற்று உள்ளார்.

வர்ஷா கெய்க்வாட்

மராட்டியத்தில் தாராவி பகுதி குட்டி தமிழ்நாடு என்று அழைக்கப்படுகிறது. இங்கு தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். சட்டசபை தேர்தலில், தாராவி தொகுதியில் ஏற்கனவே ஹாட்ரிக் வெற்றி பெற்ற வர்ஷா கெய்க்வாட் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து சிவசேனாவின் ஆஷிஸ் வசந்த் மோரே, எம்.ஐ.எம். கட்சியை சேர்ந்த மனோஜ் சன்சாரே, நவநிர்மாண் சேனா கட்சியின் சந்தீப் விநாயக், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அனிதா கவுதம் உள்ளிட்ட 11 போ் போட்டியிட்டனர். எனினும் காங்கிரஸ் -சிவசேனா இடையே தான் கடும் போட்டி நிலவியது.

4-வது முறையாக வெற்றி

இந்தநிலையில் நேற்று தாராவி தொகுதியில் பதிவான வாக்குகள் தாராவி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் வைத்து எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் வர்ஷா கெய்க்வாட்டுக்கு 39 வாக்குகளும், ஆஷிஸ் வசந்த் மோரேவுக்கு 37 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் முதல் சுற்றில் இருந்து வர்ஷா கெய்க்வாட் தான் முன்னிலையில் இருந்தார். 22 சுற்றுகள் எண்ணிக்கையின் முடிவில் வர்ஷா கெய்க்வாட் 53 ஆயிரத்து 954 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

2-ம் இடம் பிடித்த சிவசேனா வேட்பாளர் ஆஷிஸ் வசந்த் மோரே 42 ஆயிரத்து 130 வாக்குகள் பெற்றார். எம்.ஐ.எம். கட்சி வேட்பாளர் மனோஜ் சன்சாரே 13 ஆயிரத்து 779 வாக்குகள் பெற்றார். 4-வது முறையாக வெற்றி பெற்றதன் மூலம் வர்ஷா கெய்க்வாட் தாராவி காங்கிரஸ் கோட்டை என்பதை நிருபித்து உள்ளார்.

44 வயதாகும் வர்ஷா கெய்க்வாட் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தாராவி எம்.எல்.ஏ.வாக உள்ளார். 2009 முதல் 2014 வரை மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாகவும் இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story