சட்டசபை தேர்தலில் பங்கஜா முண்டே உள்பட 7 மந்திரிகள் தோல்வி
சட்டசபை தேர்தலில் பங்கஜா முண்டே உள்பட 7 மந்திரிகள் தோல்வியை தழுவினர்.
மும்பை,
சட்டசபை தேர்தலில் பங்கஜா முண்டே உள்பட 7 மந்திரிகள் தோல்வியை தழுவினர்.
பங்கஜா முண்டே
மராட்டிய சட்டசபை தேர்தலில் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி தொகுதியில் பா.ஜனதா சார்பில் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி பங்கஜா முண்டே போட்டியிட்டார். அவரை எதிர்த்து இந்த தொகுதியில் அவரது ஒன்று விட்ட சகோதரரான தேசியவாத காங்கிரசை சேர்ந்த சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே களம் இறங்கி இருந்தார். பிரசாரத்தின் போது அவர் தன்னை ஆபாசமாக பேசியதாக பங்கஜா முண்டே குற்றம் சாட்டினார். இது தொடர்பான வீடியோ வைரல் ஆனது.
இந்த பரபரப்பான நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் மந்திரி பங்கஜா முண்டே 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். இவர் மறைந்த பா.ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டேயின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 6 மந்திரிகள் தோல்வி
இதேபோல தொழிலாளர் நலத்துறை மந்திரி பாலா பெகடே மாவல் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் சுனில் செல்கேயிடம் தோல்வி அடைந்தார். நீர்பாதுகாப்பு துறை மந்திரி ராம் ஷிண்டே, கர்ஜத் - ஜாம்கெட் தொகுதியில் சரத்பவார் உறவினர் ரோகித் பவாரிடமும், பால்வளத்துறை இணை மந்திரி அர்ஜூன் கோத்கர் ஜல்னா தொகுதியிலும், நீர்பாதுகாப்பு துறை இணை மந்திரி விஜய் சிவ்தரே புரந்தர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் ஜக்தாப்பிடமும், வேளாண் துறை மந்திரி அனில் போன்டே மோர்சி தொகுதியில் சுவாபிமானி கட்சி வேட்பாளர் தேவேந்திர புயரிடமும், மின்சாரத்துறை இணை மந்திரி மதன் எராவர் யவத்மாலிலும் தோல்வியை தழுவினர்.
சிவசேனாவை சேர்ந்த சட்டசபை துணை சபாநாயகர் விஜய் ஹாட்டி பர்னெர் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் லங்கேயிடம் தோல்வி அடைந்தார்.
Related Tags :
Next Story