சினிமா சிறப்பு காட்சிக்கு வெளிப்படையான டிக்கெட் விலை நிர்ணயம் செய்யும் முறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


சினிமா சிறப்பு காட்சிக்கு வெளிப்படையான டிக்கெட் விலை நிர்ணயம் செய்யும் முறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 26 Oct 2019 4:00 AM IST (Updated: 25 Oct 2019 11:43 PM IST)
t-max-icont-min-icon

சினிமா சிறப்பு காட்சிகளுக்கு வெளிப்படையான டிக்கெட் விலை நிர்ணயம் செய்யும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தூத்துக்குடி, 

சினிமா சிறப்பு காட்சிகளுக்கு வெளிப்படையான டிக்கெட் விலை நிர்ணயம் செய்யும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

அதிக கட்டணம்

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி என்ற பெயரில் அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார் வந்தது. எனவே, அதை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த முறை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் பிரமுகர்கள் என்னை சந்தித்து அனுமதி கேட்டனர். அவர்கள் கட்டணம் தொடர்பான நிபந்தனைகளை ஏற்றதன் பேரில், முதல்-அமைச்சரிடம் ஆலோசனை பெற்று ‘பிகில்’ திரைப்படத்துக்கு ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

டிக்கெட் விலை

சினிமா சிறப்பு காட்சிகளுக்கு வெளிப்படையான டிக்கெட் விலையை நிர்ணயம் செய்யும் முறை குறித்து ஆலோசித்து உள்ளோம். விரைவில் அதை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக சீமான் குதர்க்கமாக பேசி வருகிறார். நடிகர் விஜயின் திரைப்படம் என்பதற்காக அனுமதி மறுக்கப்படவில்லை. அதிக கட்டண வசூலை தடுப்பதற்காகவே சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, இதை எல்லாம் புரிந்து கொண்டு, அவர் பேசி இருந்தால் நன்றாக இருக்கும்.

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடப்பதற்கு முன்னரே உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் அறிவித்துவிட்டார். அதன்படி நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடக்கலாம். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போல், உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றிபெற்று அடுத்த ஜனவரிக்குள் உள்ளாட்சி பதவிகளில் அ.தி.மு.க. பிரதிநிதிகள் பொறுப்பு ஏற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story