மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது - புறநோயாளிகள் பாதிப்பு


மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது - புறநோயாளிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 25 Oct 2019 10:45 PM GMT (Updated: 25 Oct 2019 6:31 PM GMT)

கரூர் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது. புறநோயாளிகள் பாதிப்படைந்தனர்.

கரூர், 

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை அரசு மருத்துவமனைகளில் நியமிக்க வேண்டும், அரசு மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பு பணியிடங்களுக்கு முறையான வெளிப்படையான கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக கூட்டமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

அதன்படி கரூர் மாவட்டத்தில் நேற்று அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அரசு டாக்டர்கள் பலர் பணிக்கு வரவில்லை. ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சிவராமன் தலைமையில் அவசர சிகிச்சை பிரிவு வார்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் புறநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். மற்றொரு சங்கத்தை சேர்ந்த அரசு டாக்டர் கள் சிலர் பணிக்கு வந்திருந்தனர். அவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். அந்த டாக்டர்களிடம் புறநோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்றனர். மருத்துவமனையில் அவசர சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகளில் டாக்டர்கள் பணியில் இருந்தனர். மாவட்டம் முழுவதும் 237 டாக்டர்களில் பாதிக்கு மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். காலவரையற்ற போராட்டம் என்பதால் வேலை நிறுத்தம் நீடிக்கும் எனவும், சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் மாநில நிர்வாகிகள் முடிவினை அறிவிப்பார்கள் என அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story