அறந்தாங்கியில் சர்க்கரை ஆலையை மூடக்கூடாது விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்


அறந்தாங்கியில் சர்க்கரை ஆலையை மூடக்கூடாது விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Oct 2019 4:15 AM IST (Updated: 26 Oct 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கியில் உள்ள சர்க்கரை ஆலையை மூடக்கூடாது என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும், 2018-19ம் ஆண்டிற்கான காப்பீட்டுத்தொகை இன்னும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதற்கு கலெக்டர், உயர் அதிகாரிகளிடம் பேசி வருகிற செவ்வாய்க்கிழமைக்குள் காப்பீட்டு தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார். தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர். அதன் விவரம் வருமாறு:-

விவசாயி சோமையா:- மாவட்டத்தில் உள்ள வரத்து வாரிகளை தூர்வார வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முழுமையாக பணி வழங்க வேண்டும். கல்வி கடன் பெற்ற மாணவர்களின் பெற்றோரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை வங்கிகள் பிடித்தம் செய்கிறது. இதனை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும்.

விவசாயி சேகர்:- விவசாயிகளுக்கு அனைத்து வகை மானியமும் வழங்க வேண்டும். குடிமராமத்து பணியில் அனைத்து குளங்களையும் தூர்வார வேண்டும். விவசாயிகளுக்கு புதிய கடன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயி அப்பாவு:- இந்த ஆண்டு ஓரளவு மழை பெய்து வருகிறது. இதனால் சில ஏரிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஒரு சில ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் தண்ணீர் தேங்கவில்லை. இதற்கு வருவாய்த்துறை தகுந்த நட வடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயி பொன்னுச்சாமி:- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறுகளை தூர்வார வேண்டும். ஆறுகள் முழுவதும் முட்செடிகள் வளர்ந்து கிடக்கிறது. இதனால் வெள்ள நீர் வந்தால் கண்டிப்பாக ஆறுகள் உடைய வாய்ப்புள்ளது. இதைதடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயி செல்லத்துரை:- கல்லணை கால்வாய் மேடாக காணப்படுகிறது. பல ஆண்டுகளாக தூர்வாராததால் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. எனவே கல்லணை கால்வாயை தூர்வார வேண்டும்.

விவசாயி மிசா மாரிமுத்து:- காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். நகர பஸ்களை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரிகளை தூர்வார வேண்டும்.

விவசாயி தனபதி:- கஜாபுயல் பாதித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அறந்தாங்கி பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையை மூடக்கூடாது.

இந்த நிலையில் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வந்தார். கூட்ட முடிவில் அவர் பேசும்போது, ‘புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கனவான காவிரி- வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அதற்கான பணிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும். புதுக்கோட்டை நகராட்சிக்கு 2050-ம் ஆண்டு வரை குடிநீர் வழங்கும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.513 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது’ என்றார்.

தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் தோட்டக்கலைத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த துண்டுபிரசுரம், கையேடுகளை விவசாயிகளுக்கு வழங்கினார். பின்னர் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், வேளாண் இணை இயக்குனர் சுப்பையா, நகராட்சி ஆணையர் சுப்பிர மணியன் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story