நாமக்கல், திருச்செங்கோட்டில் வீடு, கடைகளில் திருடியவர் கைது
நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் வேலூரில் வீடு, கடைகளில் நகை, பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 30 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
பரமத்தி வேலூர்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள ஒரு புத்தக கடையில் 10.9.2018-ம் தேதி இரவில் கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருடப்பட்டது. இதேபோல நாமக்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருச்சி ரோடு பொன்விழா நகரில் 22.3.2019-ந் தேதி இரவு பொன்னப்பன் மகன் மதிவாணன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு போனது.
நாமக்கல் மோகனூர் ரோடு நாவல் நகரில் கருப்ப கவுண்டர் மகன் சின்னுசாமி என்பவரின் வீட்டில் 12.10.2019-ந் தேதி பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு போனது. இதேபோல வேலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட நான்கு ரோடு அருகில் விஸ்வநாதன் மகன் புவியரசன் என்பவர் வீட்டில் 19.10.2019-ந் தேதி இரவு வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு போனது. இந்த திருட்டுகள் தொடர்பாக அந்தந்த போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த திருட்டு வழக்குகளில் தொடர்பு உடையவர்களை கண்டுபிடிக்க நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், திருச்செங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் மற்றும் வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் வேலூர் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கரூர் பக்கமிருந்து மொபட்டில் வந்தவர் போலீசாரை கண்டதும் திரும்பி செல்ல முயற்சித்தார். அவரை தனிப்படையினர் மடக்கி பிடித்து வேலூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் சென்னை திருவெற்றியூர் சக்தி கணபதி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த ராமதாஸ் மகன் வெங்கடேஷ் என்ற சட்டர் வெங்கடேஷன் (வயது 49) என்பதும், அவர் திருச்செங்கோடு, நாமக்கல் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் வீடு, கடையின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடியவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை மீட்டனர். மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த திருட்டு வழக்குகளில் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார்.
Related Tags :
Next Story