பெரியாறு நீட்டிப்பு கால்வாயை சீரமைத்து தண்ணீர் கொண்டுவர வலியுறுத்தல்


பெரியாறு நீட்டிப்பு கால்வாயை சீரமைத்து தண்ணீர் கொண்டுவர வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Oct 2019 10:30 PM GMT (Updated: 25 Oct 2019 9:01 PM GMT)

பெரியாறு நீட்டிப்பு கால்வாயை முறையாக சீரமைத்து குடிநீருக்கும் விவசாயத்திற்கும் தண்ணீர் கொண்டுவர விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி பகுதியில் விவசாய நிலங்கள் அதிகப்படியாக உள்ளன. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள புலிப்பட்டி கிராமத்தில் இருந்து பெரியாறு நீட்டிப்பு கால்வாய் எண் 7 வழியாக பிரிந்து வஞ்சி நகரம், சுக்காம்பட்டி வழியாக கூவான மலை கோட்டை என்றழைக்கப்படும் இருமலைகளுக்கு இடையே சிங்கம்புணரி வழியாக ஏரியூர் வரை சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு பெரியாறு நீட்டிப்பு கால்வாய் செல்கிறது.

இந்த கால்வாய் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயன்பெறும் வகையிலும், குடிநீருக்கும் இந்த கால்வாயில் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து சிங்கம்புணரியை சேர்ந்த சோமு என்ற விவசாயி கூறுகையில், பெரியாறு நீட்டிப்பு கால்வாய் 30 வருடங்களாக எந்த பயனும் இல்லாமல் உள்ளது. கால்வாயில் ஒருமுறைகூட தண்ணீர் கடைமடை சென்றடையவில்லை. கடந்த ஆண்டு கலெக்டர் ஜெயகாந்தன் ஒத்துழைப்புடன், அமைச்சர் பாஸ்கரன் ஏற்பாட்டால் கால்வாயில் 20 நாட்கள் உபரிநீர் சுமார் 200 கன அடி வீதம் திறந்துவிடப்பட் டது. ஆனால், கால்வாய் முறையாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் முழுமையாக தண்ணீர் வரவில்லை.

இதேநிலை இந்த வருடமும் தொடர்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் சுத்தம் செய்யும் வேலை நடைபெற்றது. முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணையில் நீர்ப்பிடிப்பு அதிகரித்து வரும் வேளையில், விவசாய நடவு பணி நடைபெற்று வரும் இந்த நேரத்தில் தூர்வாரும் பணியை விரைந்து முடித்தால் எங்கள் பகுதிக்கு நீர் ஆதாரம் கிடைக்கும்.

தமிழக அரசு உத்தரவின்படி கலெக்டர் ஜெயகாந்தனின் துரித நடவடிக்கையால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், கண்மாய்கள் போன்றவை பல ஆண்டுகளுக்கு பின்பு தூர்வாரப்பட்டு வருகிறது. தற்போது தண்ணீர் சேமித்து வைக்க குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் தயார் நிலையில் உள்ளன.

இந்தநிலையில் 20 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் சுக்காம்பட்டி கூவான மலை, கோட்டை மலை ஆகிய இரு மலைகளுக்கிடையே ஏற்பட்ட மண்சரிவால் கடைமடை வரை தண்ணீர் வராமல் போனது. தற்போது நல்ல மழை பெய்து வரும் நிலையில் குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் உள்ள போது, 2 மலைகளுக்கிடையே வரும் பெரியாறு நீட்டிப்பு கால்வாய் பகுதியை தூர்வாரினால், வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் பெரியாறு நீட்டிப்பு கால்வாய் வழியாக எங்கள் பகுதிக்கு குறிப்பாக கடைமடை ஏரியூர் வரை வரும். இதற்கு அமைச்சர், கலெக்டர் ஆகியோர் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

பாரம்பரிய விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் அருண் கூறுகையில் பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் இதுவரை கடைமடை வரை தண்ணீர் வர வழியின்றி ஆங்காங்கே அடைப்பு உள்ளது. இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சுமார் ரூ.9 கோடியில் கால்வாய் சீரமைக்கப்பட்டதாக அரசு விளம்பர பலகை வைத்துள்ளது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் தூர்வாரும் பணி கடந்த ஆண்டை போல் இல்லாமல், முறையாக நடைபெற வேண்டும்.

இந்த கால்வாயில் முறையாக அடைப்புகளை அகற்றினால், தண்ணீர் கடைமடை வரை செல்வதோடு, விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படும். கால்வாயில் தூர்வாரப்படாத பகுதிகளில் மண்களை அப்புறப்படுத்த வேண்டும். கால்வாயில் இருந்து எடுக்கப்பட்ட மண் மழை மற்றும் காற்றால் மீண்டும் கால்வாய்க்குள் சென்றடையும். இதை கருத்தில் கொண்டு கால்வாயின் அருகே சுமார் 5 மீட்டர் தூரத்திற்கு மண்கள் அகற்றப்பட வேண்டும் என்றார்.

Next Story