ஊதிய உயர்வு வழங்க கோரி அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் - நோயாளிகள் அவதி


ஊதிய உயர்வு வழங்க கோரி அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் - நோயாளிகள் அவதி
x
தினத்தந்தி 26 Oct 2019 4:15 AM IST (Updated: 26 Oct 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு வழங்க கோரி தஞ்சை மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு டாக்டர்களுக்கும் காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும். அரசு டாக்டர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருந்தகம் ஆகியவற்றில் பணியாற்றும் பெரும்பாலான டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். பரிசோதனைகள், சிகிச்சைகள் எதையும் டாக்டர்கள் மேற்கொள்ளாததால் புறநோயாளிகள் சேவை முற்றிலும் முடங்கியது.

இதனால் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனர். நோயாளிகள் சிரமத்தை போக்கும் வகையில் பயிற்சி டாக்டர்கள் சிலர், பரிசோதனைகளை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகளை எழுதி கொடுத்தனர். தேர்வு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பொதுமக்கள் நலன்கருதி உயிர் காக்கும் அவசர சிகிச்சை பிரிவும், மகப்பேறு மருத்துவப்பிரிவும், காய்ச்சல் பிரிவும் மட்டும் செயல்பட்டது. வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற டாக்டர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story