தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் முட்டிபோட்டு சென்று அதிகாரியிடம் மனு கொடுத்த விவசாயிகள்


தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் முட்டிபோட்டு சென்று அதிகாரியிடம் மனு கொடுத்த விவசாயிகள்
x
தினத்தந்தி 25 Oct 2019 11:00 PM GMT (Updated: 25 Oct 2019 9:02 PM GMT)

பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க கோரி தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் முட்டிபோட்டு சென்று அதிகாரியிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயிர்க்கடன், பயிர்க் காப்பீட்டு தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் சிலர், கூட்ட அறைக்கு வந்தனர்.

அவர்கள் திடீரென முட்டி போட்டு கொண்டு சென்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், 2018-19-ம் ஆண்டில் பயிர்க் காப்பீடு செய்த ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 30 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு இன்னும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

மத்தியஅரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்ற ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை கொண்டு விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளுக்கு நகைக்கடனாக கிராம் ஒன்றுக்கு ரூ.2,600 முதல் ரூ.3 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.

Next Story