ஆள்கடத்தல் வழக்கில் கைதானவர்: போலீசார் தாக்கியதில் வாலிபர் இறந்ததாக உறவினர்கள் புகார்; சாலை மறியல்


ஆள்கடத்தல் வழக்கில் கைதானவர்: போலீசார் தாக்கியதில் வாலிபர் இறந்ததாக உறவினர்கள் புகார்; சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Oct 2019 11:15 PM GMT (Updated: 25 Oct 2019 10:15 PM GMT)

ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர், போலீசார் தாக்கியதில் இறந்ததாக தகவல் பரவியதால் அவருடைய உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை,

மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ, முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் பார்த்திபன், எம்.பி.ஏ.பட்டதாரி. சம்பவத்தன்று ராஜூவுக்கு அவரது மகன் பார்த்திபனை கடத்தி சென்று விட்டதாகவும், 20 லட்ச ரூபாய் கொடுத்தால்தான் அவரை உயிரோடு விடுவதாகவும் செல்போனில் மிரட்டல் வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் செம்பூரணி ரோடு பகுதியில் வைத்து சோலையழகுபுரத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் பாலமுருகன்(வயது 22) என்பவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அதனைத்தொடர்ந்து வெள்ளக்கல் பகுதியில், பேரம் பேசிய பணத்தை பெற வந்த மேலஅனுப்பானடியை சேர்ந்த சரவணன், வில்லாபுரம் முருகன்(21) ஆகியோரையும் தனிப்படை போலீசார் பிடித்தனர். இதுதொடர்பாக மேலும் சிலரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன்கள், கத்தி, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்தவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் மூலம் பார்த்திபனை போலீசார் மீட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாலமுருகன் திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தகவல் பரவியது. இதை அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் பாலமுருகனை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் போலீசார் அவர்களை பார்க்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் பாலமுருகன் இறந்து விட்டதாக தெரிவித்து அவரது உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று மதியம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் ஆஸ்பத்திரி நிர்வாகம் பாலமுருகன் உயிரோடு இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பாலமுருகன் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து பாலமுருகனின் தந்தை முத்துக்கருப்பன் கூறும் போது, “சம்பவத்தன்று போலீசார் அழைப்பதாக கூறி எனது மகன் அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றான். அதன்பின்னர் அவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை. தற்போது மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் உள்ளதாக தகவல் கிடைத்தது. இங்கு வந்து விசாரித்தபோது கடத்தல் வழக்கில் எனது மகனை கைது செய்துள்ளதாகவும், போலீசார் சரமாரியாக தாக்கியதில் உடல் நிலை பாதிக்கப்பட்டு அவன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாகவும் தெரியவந்தது. மேலும் டாக்டர் ஒருவரிடம் அவனது உடல்நிலை குறித்து கேட்டபோது, எனது மகன் இறந்து விட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால் போலீசார் எனது மகன் சாகவில்லை என்று உண்மையை மறைக்கின்றனர். மேலும் கடத்தப்பட்ட வாலிபர் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நண்பர்கள். இவர்களுக்குள் ஏதோ நடந்துள்ளது. எனவே எனது மகன் இறந்ததாக கூறப்படும் விவகாரத்தில் உள்ள மர்மங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Next Story