இடைத்தேர்தல் வெற்றி தொடரும்; ‘உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் நல்ல பரிசை வழங்குவார்கள்’ - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு


இடைத்தேர்தல் வெற்றி தொடரும்; ‘உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் நல்ல பரிசை வழங்குவார்கள்’ - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
x
தினத்தந்தி 26 Oct 2019 4:15 AM IST (Updated: 26 Oct 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

இடைத்தேர்தலில் வெற்றி தொடரும் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் நல்ல பரிசை வழங்குவார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

மதுரை,

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏற்கனவே நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல் பல்வேறு பொய் பிரசாரம் செய்தார்.

அந்த பொய் பிரசாரத்திற்கு முடிவு கட்டும் வகையில் தான் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

இந்த இடைத்தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் இந்த தேர்தல் 2021 தேர்தலுக்கு அச்சாரமாக இருக்கும் என்று கூறினார்.

அது மட்டுமல்லாமல் இந்த 2 இடத்திலும் ஜெயித்தால் ஆட்சியை பிடிப்போம். அதே போல் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்று கூறினார். மேலும் அவர் முதல்-அமைச்சர் கனவோடு பேசினார். ஆனால் இன்றைக்கு மக்கள் அவருக்கு சரியான தீர்ப்பு தந்துள்ளனர்.

இன்றைக்கு தமிழ்நாட்டின் நலன் தான் முக்கியம் என்று முதல்-அமைச்சர் செயல்பட்டார். அதற்கு நல்ல பரிசை மக்கள் வழங்கி உள்ளனர். இடைத்தேர்தல் வெற்றி தொடரும். வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு நல்ல பரிசை மக்கள் வழங்குவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story