பெண்களுக்கு ஆபாச படம், வீடியோ அனுப்பிய வேலூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்


பெண்களுக்கு ஆபாச படம், வீடியோ அனுப்பிய வேலூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 26 Oct 2019 10:45 PM GMT (Updated: 26 Oct 2019 6:26 PM GMT)

வாகன தணிக்கையின்போது செல்போன் எண்ணை பெற்று பெண்களுக்கு ஆபாச படம், வீடியோ அனுப்பிய வேலூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கவேல் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

வேலூர், 

வேலூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ராஜமாணிக்கவேல். இவர் மற்றும் போலீசார் சிலர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வரும் அரசியல் கட்சி பிரமுகர் மற்றும் பொதுமக்கள் சப்-இன்ஸ்பெக்டரை கேள்வி கேட்டு திட்டுவதும், அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்பது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

அந்த வீடியோவில் பேசும் அரசியல் பிரமுகர், வாகன தணிக்கையின்போது பெண்களிடம் செல்போன் எண்ணை வாங்கி ஆபாச வீடியோக்கள் அனுப்புகிறாயா?, மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு இதுபோன்று வேலை பார்ப்பது சரியா? என்று சப்-இன்ஸ்பெக்டரை பார்த்து ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார். மேலும் பொதுமக்களும் அவரின் இந்த செயலுக்காக திட்டுகிறார்கள். அதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கவேல், இதுபோன்ற செயலில் இனிமேல் ஈடுபட மாட்டேன் என்று தெரிவிக்கிறார்.

இந்த வீடியோ தொடர்பாக விசாரணை நடத்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். அந்த விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கவேல் குறித்து திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. வேலூர் மாநகரில் வாகன தணிக்கையில் ஈடுபடும் ராஜமாணிக்கவேல், தனியாக மொபட்டில் வரும் பெண்களை நிறுத்தி சோதனையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது அவர் ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த பெண்களுக்கு அபராதம் விதித்து, செல்போன் எண்ணை வாங்கி கொள்வாராம். பின்னர் பெண்களுக்கு இரவு வேளையில் ஆபாச படம், வீடியோ அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்று அந்த பெண்களை மிரட்டி உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு ராஜமாணிக்கவேல் ஆபாச வீடியோ அனுப்பி உள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுகுறித்து உறவினரான அரசியல் பிரமுகருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து அவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டரிடம் ஆபாச வீடியோ தொடர்பாக கேள்வி கேட்டு திட்டியுள்ளார். அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது தெரிய வந்தது.

அதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கவேலை வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ராஜமாணிக்கவேல் நேற்று ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

பெண்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ் ஒருவரே ஆபாச படம், வீடியோ அனுப்பிய சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story