பணகுடி அருகே, ஆலந்துறையார் அணைக்கட்டை சீரமைக்க ரூ.10 லட்சம் ஒதுக்கீடு - கலெக்டர் ஷில்பா தகவல்
பணகுடி அருகே ஆலந்துறையார் அணைக்கட்டை சீரமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
பணகுடி,
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது ஆலந்துறையார் அணைக்கட்டு. இதன் மூலம் பணகுடி, காவல்கிணறு, லெப்பைகுடியிருப்பு, தண்டையார்குளம், வடக்கன்குளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 48 குளங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக ஆலந்துறையார் அணைக்கட்டு சேதமடைந்தது. மேலும் அதன் கால்வாய்களும் தூர்ந்துபோயின. இதனால் அந்த பகுதியில் பெய்யும் மழைநீரை தேக்கி வைக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகளே சொந்தமாக ரூ.4 லட்சத்தை திரட்டி கால்வாயை சீரமைத்தனர். மேலும் அணைக்கட்டை சீரமைக்க மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் ஷில்பா, ஆலந்துறையார் பாசன கால்வாய் பகுதியை ஆய்வு செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த விவசாயிகளிடம் கூறுகையில், ஆலந்துறையார் அணைக் கட்டை சீரமைக்கவும், கால்வாயை தூர்வாரவும் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதனை கேட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த ஆய்வின்போது ராதாபுரம் தாசில்தார் செல்வம், கோதையார் வடிநீர் உபகோட்ட செயற்பொறியாளர் கணேசன், பணகுடி வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் விஜய், முருகேசபெருமாள், இசக்கியப்பன், நிலஅளவையர் காளஸ்வர பிரபு, விவசாயிகள் சங்க தலைவர் பிராங்கிளின், சாலமோன், செந்தூரான், ஆறுமுகம் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story