பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி பண்ருட்டி தொகுதி மக்களின் கனவுகளை நிறைவேற்றி வருகிறோம் - சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அறிக்கை


பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி பண்ருட்டி தொகுதி மக்களின் கனவுகளை நிறைவேற்றி வருகிறோம் - சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அறிக்கை
x
தினத்தந்தி 27 Oct 2019 4:15 AM IST (Updated: 27 Oct 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி பண்ருட்டி தொகுதி மக்களின் கனவுகளை நிறைவேற்றி வருகிறோம் என்று சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பண்ருட்டி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெரும் ஒத்துழைப்பால் பண்ருட்டி தொகுதி மக்களின் கனவுகளை நிறைவேற்றி தந்து கொண்டு இருக்கிறேன். தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எனதிரிமங்கலம் கிராமத்தின் அருகே நீரை சேமிக்கும் வகையில் ரூ.25 கோடியே 35 லட்சம் செலவில் தடுப்பணை கட்டிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான பணிகளும் தற்போது நடந்து வருகிறது.

அதேபோல் அண்ணாகிராமம் ஒன்றியம் மேல்குமாரமங்கலம்-விழுப்புரம் மாவட்டம் ராம்பாக்கம் கிராமத்தை இணைக்கும் வகையில் தென்பெண்ணாயாற்றின் குறுக்கே ரூ30 கோடியில் மேம்பாலம் கட்டும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் நரிமேடு-பலாப்பட்டை இணைக்கும் விதமாக மலட்டாற்றின் குறுக்கே ரூ.12 கோடியில் தடுப்பணையும் கட்டப்பட்டு வருகிறது.

பண்ருட்டியில் பெண்களுக்கென தனியே அரசு மகளிர் பள்ளியும் கொண்டுவரப்பட்டுள்ளது. பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குடுமியான்குப்பம், கொளப்பாக்கம், சிறுகிராமம், நத்தம், வீரப்பெருமாநல்லூர், அண்ணாகிராம ஊராட்சி ஒன்றியம் கரும்பூர், கொரத்தி, ஒறையூர் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டி எனதிரிமங்கலம் தென்பெண்ணையாற்றில் ரூ.9 கோடியே ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாகவும், மாளிகை மேடு நடுநிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ரூ.1 கோடியே 80 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைக்கப்பட்டது. பண்ருட்டியில் இருந்து கடலூருக்கு பெண்களுக்கென்று தனியாக மகளிர் பஸ் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

மேல்பட்டாம்பாக்கத்தில் ரூ. 45 லட்சத்தில் கால்நடை மருத்துவமனை கட்டிடம், பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.50 லட்சத்தில் குளிர்பதன சேமிப்பு கிடங்கு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியே 25 லட்சத்தில் அறுவை சிகிச்சை வசதியுடன் புதிய பிரசவ வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.3¼ கோடியில் கூடுதல் கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. மேலும் பண்ருட்டி மணி நகரில் தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.4 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் உரக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி கிடப்பில் இருந்த நிலையில், இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தெரிவித்து, தற்போது பாலம் கட்டும் பணி நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. மேலும் பண்ருட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன்.

இதுபோன்று இன்னும் மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை பண்ருட்டி தொகுதியில் நிறைவேற்றி தர இருக்கிறோம் என்பதுடன், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story