தீபாவளி பண்டிகையையொட்டி தூத்துக்குடியில் புத்தாடை, பட்டாசுகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி தூத்துக்குடியில் புத்தாடை, பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
தூத்துக்குடி,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து இறைவனை வழிபடுவார்கள். பின்னர் இனிப்பு, பலகாரங்களை சாப்பிட்டும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.
இதையொட்டி தூத்துக்குடியில் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க நேற்று பொதுமக்கள் குவிந்தனர். தூத்துக்குடி பஜாரில் உள்ள துணிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. பஜார் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தூத்துக்குடி காய்கனி மார்க்கெட், பூ மார்க்கெட்டுகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சாலையோரங்களில் தற்காலிக கடைகள் பல அமைக்கப்பட்டு இருந்தன. சிறுவர்கள் ஆர்வத்துடன் கடைகளில் பட்டாசுகள் வாங்கி சென்றனர். பொதுமக்கள் குவிந்ததால் நகரில் ஒருசில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.
இதேபோல், கோவில்பட்டி மெயின் ரோடு பகுதியில் உள்ள ஜவுளி கடைகள், நகை கடைகள், பர்னிச்சர் கடைகள், இனிப்பு கடைகள், மளிகை கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமானவர்கள் புத்தாடைகள், நகைகள், பர்னிச்சர்கள், மளிகை பொருட்கள், இனிப்பு வகைகள், தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனபெட்டி, சலவை எந்திரம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், வாழைத்தார்கள், வாழை இலைகள் போன்றவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். பட்டாசு கடைகளிலும் பல்வேறு வகையான பட்டாசுகளை பொதுமக்கள் வாங்கினர். தலைதீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதியருக்கு வழங்குவதற்காக சீதன பொருட்களையும் வாங்கி சென்றனர். இதனால் அனைத்து கடைகளிலும் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.
கோவில்பட்டி புது ரோடு சந்திப்பில் இருந்து இளையரசனேந்தல் ரோடு சந்திப்பு வரையிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும், எட்டயபுரம் ரோடு வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுதேசன் (கிழக்கு), அய்யப்பன் (மேற்கு) மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story