தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது போக்குவரத்து நெரிசல்


தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 26 Oct 2019 10:30 PM GMT (Updated: 26 Oct 2019 8:15 PM GMT)

இன்று (ஞாயிற்றுக் கிழமை) தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க கரூர் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கரூர்,

தீபாவளி பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்று புத்தாடை அணிந்து, இனிப்பு, பலகாரங்களை சாமிக்கு படையல் செய்து வழிபாடு நடத்தி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி கரூரில் தீபாவளி பொருட்கள் வாங்க நேற்று கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கரூர் ஜவகர் பஜாரில் கடந்த சில நாட்களாக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் கரூர் பகுதியில் உள்ள டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை உள்ளிட்ட நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு போனஸ் தொகையை பலர் நேற்று முன்தினம் மாலையும், சிலர் நேற்றும் வழங்கினர். இதனால் தீபாவளி பண்டிகைக்கான ஜவுளி மற்றும் இனிப்பு பலகாரங்கள், பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் நேற்று கடைவீதிகளில் குவிந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

ஜவகர் பஜாரில் எங்கு திரும்பினாலும் மக்கள் தலையாக தென்பட்டது. கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருவள்ளுவர் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தரைக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மைதானம் முழுவதும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. கோவை ரோடு உள்ளிட்ட கடைவீதிகளிலும் மக்கள் குவிந்தனர்.

இதனால் கரூர் நகரத்தில் நேற்று காலை முதல் இரவு வரை வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக மனோகரா கார்னர், ஈஸ்வரன் கோவில் அருகே, உழவர் சந்தை அருகே, திருச்சி ரோடு உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர்.

காய்கறிகள் விற்பனை

தீபாவளி பண்டிகை இன்று அமாவாசை தினத்தில் வருவதால் பலர் வீடுகளில் இறைச்சி வாங்கமாட்டார்கள். சைவ உணவுகளையே சமைப்பது உண்டு. இதனால் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்கவும் மக்கள் நேற்று அதிக அளவில் வந்திருந்தனர். விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வந்த காய்கறிகள் பெரும்பாலானவை விற்றுதீர்ந்தன.

பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் நபர்கள் டாஸ்மாக் கடைகளில் மது அருந்தி நேற்றே கொண்டாட்டத்தை தொடங்கினர். இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டமும் அலைமோதியது. பண்டி கையையொட்டி தங்களது சொந்த ஊர் சென்றவர்களால் கரூர் பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் நேற்றும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பண்டிகையையொட்டி கரூரில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு

குற்ற சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க கரூர் ஜவகர் பஜார் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. மேலும் போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர். ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண் காணித்தனர்.


Next Story