தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் ஜவுளிகள், பட்டாசு விற்பனை விறுவிறுப்பு


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் ஜவுளிகள், பட்டாசு விற்பனை விறுவிறுப்பு
x
தினத்தந்தி 27 Oct 2019 4:00 AM IST (Updated: 27 Oct 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கடைவீதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் ஜவுளிகள், பட்டாசு விற்பனை விறுவிறுப்படைந்தது.

தர்மபுரி,

தீபாவளி பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தர்மபுரி நகரில் உள்ள கடைவீதிகளில் நேற்று காலை முதல் தீபாவளி ஜவுளிகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். தர்மபுரி பஸ் நிலையத்தை சுற்றி உள்ள கடைவீதி பகுதியில் ஜவுளிக்கடைகள் அதிக அளவில் உள்ளன. இந்த கடைகளில் ஏராளமானோர் ஜவுளிகள் வாங்க குவிந்தனர்.

இதேபோல் நகரின் முக்கிய கடைவீதிகளில் உள்ள இனிப்பு கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளிலும் ஜவுளிகள், பொருட்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள். தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க மளிகை கடைகள், டிபார்ட்மெண்ட் கடைகளிலும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர். இதன் காரணமாக கடைகளில் துணிகள், இனிப்புகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

கண்காணிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மபுரியில் பல்வேறு இடங்களில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் பட்டாசுகளை வாங்க இளைஞர்கள், சிறுவர்கள் அதிக அளவில் திரண்டனர். இதையொட்டி தர்மபுரி பஸ் நிலையம் மற்றும் முக்கிய கடைவீதிகள் உள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்கள் கூட்டம் அதிகம் கூடும் பகுதிகளில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இருசக்கர வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் கூடும் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் நபர்கள் குறித்து உடனடியாக தெரிவிக்குமாறு மைக் மூலம் தொடர் அறிவிப்பு செய்தனர்.

அரூர், பென்னாகரம்

இதேபோல் அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய நகரங்களிலும் உள்ள கடைவீதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. ஜவுளிகள், பட்டாசு, இனிப்புகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.


Next Story