மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவு: பா.ஜனதாவின் அதிகார ஆணவத்தை மக்கள் ஏற்கவில்லை - சிவசேனா கடும் தாக்கு


மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவு: பா.ஜனதாவின் அதிகார ஆணவத்தை மக்கள் ஏற்கவில்லை - சிவசேனா கடும் தாக்கு
x
தினத்தந்தி 26 Oct 2019 11:00 PM GMT (Updated: 26 Oct 2019 9:25 PM GMT)

பா.ஜனதாவின் அதிகார ஆணவத்தை மக்கள் ஏற்கவில்லை என்று பா.ஜனதாவை சிவசேனா கடுமையாக தாக்கி உள்ளது.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 24-ந் தேதி வெளியானது. இதில் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 தொகுதிகளும் கிடைத்தன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி 200-க்கும் அதிகமான இடங்களை பிடிக்கும் என கூறியிருந்த நிலையில் இந்த முடிவு அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேர்தலுக்கு முன் “மகா ஜனாதேஷ்” என்ற பெயரில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் யாத்திரை சென்றார். அவரும் பா.ஜனதா கூட்டணி சட்டசபை தேர்தலில் 200-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என கூறியிருந்தார்.

இந்தநிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பா.ஜனதாவை கடுமையாக தாக்கி சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் தலையங்கம் வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பா.ஜனதா எதிர்க்கட்சிகளை சிதைத்தது. அந்த கட்சிகளின் எதிர்காலம் என்னவாகும் என பலர் பேசினர். ஆனால் தேசியவாத காங்கிரஸ் மீண்டும் எழுந்து 50-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. தலைமை இல்லாத காங்கிரஸ் 44 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. அதிக இடங்களில் சிறிய கட்சிகள் வெற்றி பெற்று உள்ளன.

ஆட்சியில் இருப்பவர்கள் அதிகார ஆணவத்தில் இருக்க கூடாது என்பதை இந்த தேர்தல் முடிவு மூலம் மக்கள் எச்சரித்து உள்ளனர். எதிர்க்கட்சிகளை சிதறடித்து, எதிர்க்கட்சியில் இருந்து பலரை இழுத்ததன் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடலாம் என பா.ஜனதா நினைத்து இருந்தது. அதை மக்கள் நிராகரித்து விட்டனர்.

சத்ரபதி சிவாஜி மன்னரின் வழி தோன்றலான உதயன் ராஜே போஸ்லே பா.ஜனதாவில் இணைந்ததன் மூலம் சத்ரபதி சிவாஜியின் ஆசிர்வாதம் பா.ஜனதாவுக்கு கிடைத்து விட்டதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். ஆனால், சத்தாரா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இந்த தோல்வி மூலம் அவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

தான் பலம்வாய்ந்த மல்யுத்த வீரர் என தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். ஆனால் சரத்பவார் பலமானவர் என்பதை நிரூபித்துவிட்டார். மராட்டிய மக்கள் அதிகார ஆணவத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எங்கள் கால்கள் எப்போதும் தரையில் தான் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story