2 போலீஸ்காரர்களை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயற்சி ரவுடி, துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
2 போலீஸ்காரர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவம் பெங்களூருவில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு பீனியா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதுபற்றி பீனியா போலீசில் புகார்கள் பதிவாகி உள்ளன. கொள்ளையர்களை பிடிக்க பீனியா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது ஹரீஷ் என்ற ‘ராபரி‘ ஹரீஷ் (வயது 27) என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்ததும், ஹரீசின் பெயர் நந்தினி லே-அவுட் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம்பெற்றிருப்பதும் தெரியவந்தது. ஹரீசையும், அவருடைய கூட்டாளியையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ஹரீஷ் கங்கம்மனகுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அப்பிகெரே ஏரி பக்கத்தில் பதுங்கி இருப்பதாக நேற்று அதிகாலையில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்த ஹரீஷ் அங்கிருந்து வேகமாக ஓடினார். போலீஸ்காரர்களான ரவி மற்றும் லட்சுமி நாராயணா ஆகியோர் அவரை மடக்கி பிடித்தனர். இதனால் கோபம் அடைந்த ஹரீஷ் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து 2 பேரின் கைகளிலும் குத்தினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தனது துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டு போலீசில் சரண் அடையும்படி ஹரீசிடம் கூறினார். ஆனால் அவர் சரண் அடைய மறுத்து போலீஸ்காரர்களை தாக்க முயன்றார்.
இதனால் பாதுகாப்பு கருதி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஹரீசை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு ஹரீசின் காலில் பாய்ந்தது. சுருண்டு விழுந்த ஹரீசை போலீசார் கைது செய்தனர். குண்டு காயமடைந்த ஹரீஷ், கத்திக்குத்து காயம் அடைந்த போலீஸ்காரர்களான ரவி, லட்சுமி நாராயணா ஆகியோரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் நேற்று பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story