டி.கே.சிவக்குமாருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி? - சித்தராமையா பதில்
டி.கே.சிவக்குமாருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்படுமா? என்பது குறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு,
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அந்த வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர், டெல்லியில் இருந்து நேற்று பெங்களூருவுக்கு திரும்பினார். அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் டி.கே.சிவக்குமார் பெங்களூரு திரும்பிய நிலையில் எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா, கதக் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள புறப்பட்டு சென்று விட்டார்.
டி.கே.சிவக்குமாருடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக சித்தராமையா கதக் சென்றிருப்பதாக கூறப்படு கிறது. அதே நேரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள தினேஷ் குண்டுராவை மாற்றிவிட்டு, டி.கே.சிவக்குமாருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், கதக் செல்லும் முன்பாக உப்பள்ளி விமான நிலையத்தில் நேற்று முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக் குமார் நியமிக்கப்பட இருப்பதாக வரும் தகவல்கள் வதந்தி மட்டுமே. தற்போதுள்ள சூழ்நிலையில் மாநில தலைவரை மாற்றுவது குறித்து காங்கிரசில் எந்த ஒரு ஆலோசனையும் நடைபெறவில்லை. மாநில தலைவரை நியமிப்பதில் காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு எடுக்கும். கட்சி மேலிடம் எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்வோம்.
மாநில தலைவராக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட உள்ளார், தற்போதுள்ள தலைவர் மாற்றப்பட உள்ளார் என்பது எல்லாம் நீங்கள் (பத்திரிகையாளர்கள்) யூகங்கள் அடிப்படையில் வெளியிடும் செய்தியாகும். டி.கே.சிவக்குமாரை காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக வரவேற்கிறார்கள். அது அவர்களது விருப்பம்.
பல்லாரியில் இருந்து இதற்கு முன்பு பெங்களூருவுக்கு பாதயாத்திரை சென்றேன். அதுபோல, மற்றொரு பாதயாத்திரை நடத்தப்படலாம். அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு எதிரான அலை உள்ளது. இடைத்தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் விரைவில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூற உள்ளது. அதன்பிறகு, இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
கர்நாடக இடைத்தேர்தலில் பிரதமர் மோடி, அமித்ஷாவின் தந்திரங்கள் எடுபடாது. அதுபோல, காஷ்மீர் பிரச்சினை, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பது குறித்து பிரசாரம் செய்தாலும், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story