சிறைக்கு சென்ற டி.கே.சிவக்குமாருக்கு உற்சாக வரவேற்பு தேவையா? லோக் அயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கேள்வி


சிறைக்கு சென்ற டி.கே.சிவக்குமாருக்கு உற்சாக வரவேற்பு தேவையா? லோக் அயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கேள்வி
x
தினத்தந்தி 27 Oct 2019 4:30 AM IST (Updated: 27 Oct 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

முறைகேட்டில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற டி.கே.சிவக்குமாருக்கு உற்சாக வரவேற்பு தேவையா? என்று லோக் அயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு, 

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்து டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு டி.கே.சிவக்குமாருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, நேற்று அவர் பெங்களூருவுக்கு திரும்பினார். பெங்களூரு திரும்பிய டி.கே.சிவக்குமாருக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பல்லாரியில் நேற்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோக் அயுக்தா முன்னாள் நீதிபதியான சந்தோஷ் ஹெக்டேவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

இதற்கு முன்பு சிறைக்கு சென்று வந்தவர்களை மக்கள் புறக்கணித்தனர். சிறை சென்றவர்கள், தண்டனை அனுபவித்தவர்களை மக்கள் ஒதுக்கி வைத்தனர். தற்போது சிறைக்கு சென்று வந்தவர்களை மக்கள் வரவேற்கிறார்கள். முறைகேட்டில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவருக்கு (டி.கே.சிவக்குமாருக்கு) இதுபோன்ற உற்சாக வரவேற்பு தேவையா?. சமுதாயத்தில் மாற்றம் வரவேண்டும். சமுதாயத்தில் தற்போதுள்ள நடை முறைகள் மாற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களிடையே மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமானதாகும். மக்களிடையே பணம், அதிகார ஆசை அதிகரித்துவிட்டது.

பணம் இருப்பவர்கள் அதிகாரம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிகாரத்திற்கு வந்த பின்பு ஊழல், பிற முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள். ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வரவேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களில் எத்தனை பேர் மக்கள் சேவையாற்றுகிறார்கள்?. லோக் அயுக்தா அமைப்பு செயல் இழந்து விட்டது. அந்த அமைப்பையும் தவறாக பயன்படுத்துகின்றனர். ஊழல் தடுப்பு படைக்கு போதிய அதிகாரம் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் ஊழலை ஒழிக்க சாத்தியமில்லை. இவ்வாறு சந்தோஷ் ஹெக்டே கூறினார்.

Next Story