சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் விடுதலை: பெங்களூருவுக்கு திரும்பிய டி.கே.சிவக்குமாருக்கு உற்சாக வரவேற்பு
சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி பெங்களூருவுக்கு திரும்பிய முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெங்களூரு,
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு டெல்லி ஐகோர்ட்டு நிபந்தனைகளுடன் கடந்த 23-ந் தேதி ஜாமீன் வழங்கியது. அன்றைய தினம் அவர் திகார் சிறையில் இருந்து விடுதலையானார். டி.கே.சிவக்குமார் உடனடியாக டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பவில்லை. மாறாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து நேற்று மதியம் டி.கே.சிவக்குமார் விமானம் மூலம் பெங்களூருவுக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் டி.கே.சிவக்குமாரை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். மேலும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியும் விமான நிலையத்தில் வைத்து டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேசினார். இந்த நிலையில், பெங்களூருவுக்கு திரும்பிய டி.கே.சிவக்குமாருக்கு விமான நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், மேள, தாளங்களுடனும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு திறந்த காரில் டி.கே.சிவக்குமார் ஊர்வலமாக புறப்பட்டு வந்தார். விமான நிலையத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி அலுவலகம் வரை டி.கே.சிவக்குமாருக்கு காங்கிரஸ் கட்சியினர் சாலையோரம் திரண்டு நின்று பூக்களை தூவியும், ஆளுயர மாலை மற்றும் பிரமாண்ட ஆப்பிள் மாலை அணிவித்தும் வரவேற்றனர். காங்கிரஸ் கட்சி அலுவலகத் துக்கு சென்ற அவரை மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.
டி.கே.சிவக்குமாரை வரவேற்க ராமநகர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்திருந்தனர்.
விமான நிலையம் அருகே காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் டி.கே.சிவக்குமார் பேசுகையில், “என் மீது நீங்கள் வைத்துள்ள அன்பு, நம்பிக்கை, விசுவாசத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளேன். எனக்காக நீங்கள் எல்லா விதமான போராட்டங்கள் நடத்தி உள்ளர்கள். கடவுளிடம் வேண்டி உள்ளர்கள். இது முடிவு அல்ல. ஆரம்பம் தான். எனக்கும், குடும்பத்தினருக்கும் எவ்வளவு தொல்லை கொடுக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும். நான் ஒரு குடும்பத்தின் சொத்து அல்ல. உங்களது சொத்து. தொண்டர்களுடன் இணைந்து மீண்டும் பணியாற்ற தயாராக இருக்கிறேன்“ என்றார்.
விமான நிலையத்தில் இருந்து காங்கிரஸ் அலுவலகத்திற்கு காரில் வந்த டி.கே.சிவக்குமாருடன் ஏராளமான வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் காங்கிரஸ் கட்சியினர், அவரது ஆதரவாளர்கள் வந்தனர். இதனால் அவர் வந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். பின்னர் போலீசார், போக்குவரத்து நெரிசலை சரி செய்தார்கள்.
Related Tags :
Next Story