மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நிதி உதவி கலெக்டர் ராமன் தகவல்


மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நிதி உதவி கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 27 Oct 2019 3:50 AM IST (Updated: 27 Oct 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நிதி உதவி வழங்கப்படுகிறது.

சேலம்,

தமிழ்நாடு சட்டமன்ற விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கும், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கும் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தார். அதாவது சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்களில் உட்கட்டமைப்பிற்கான செலவின தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.2½ கோடி வரை தமிழக அரசால் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு சிறிய ஜவுளி பூங்காவும் ஒரு சிறப்பு நோக்க முகமையினை பதிவு செய்திருக்க வேண்டும். முதலீட்டாளர்கள் சிறப்பு நோக்க முகமையில் அங்கம் வகிக்கவும், அதற்காக தனது பங்கினை அளிக்கவும், எழுத்து மூலமாக விருப்பம் தெரிவித்தல் வேண்டும். நிலம், தொழிற்சாலை கட்டிடம், எந்திரம் மற்றும் தளவாடங்களுக்கு செய்யப்படும் முதலீடானது உட்கட்டமைப்பு வசதிக்கு செலவிடப்படும். முதலீட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக இருத்தல் வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் ஜவுளி பூங்காவின் முன்னேற்றம் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குனர் தொடர்ந்து கண்காணித்து வருவார்.

பயன்பெறலாம்

இவ்வாறு அமையவுள்ள ஜவுளி பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன், குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும். எனவே முதலீட்டாளர்களும், தொழில்முனைவோர்களும் தமிழக அரசின் நிதி உதவியை பயன்படுத்தி தொழில் தொடங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு சேலம் கலெக்டர் அலுவலக அறை எண் 407, 4-வது தளம், கைத்தறி மற்றும் துணிநூல் துணை இயக்குனர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story