போலீசார் தாக்கியதால் இறந்த வாலிபரின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு; தாக்கியவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை


போலீசார் தாக்கியதால் இறந்த வாலிபரின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு; தாக்கியவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 27 Oct 2019 4:00 AM IST (Updated: 27 Oct 2019 3:51 AM IST)
t-max-icont-min-icon

ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு போலீசார் தாக்கியதில் இறந்ததாக கூறப்படும் வாலிபரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் அந்த வாலிபரை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை,

மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ, முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் பார்த்திபன், எம்.பி.ஏ.பட்டதாரி. சம்பவத்தன்று ராஜூவுக்கு அவரது மகன் பார்த்திபனை கடத்தி சென்று விட்டதாகவும், 20 லட்ச ரூபாய் கொடுத்தால்தான் அவரை உயிரோடு விடுவதாகவும் செல்போனில் மிரட்டல் வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் சோலையழகுபுரத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் மகனும், டிரைவருமான பாலமுருகன்(வயது 22), மேலஅனுப்பானடி சரவணன், வில்லாபுரம் முருகன் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம், கத்தி, செல்போன்கள், கார், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் பார்த்திபனை போலீசார் மீட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாலமுருகன் திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தகவல் பரவியது. இதை அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் பாலமுருகனை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் போலீசார் அவர்களை பார்க்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பாலமுருகன் இறந்து விட்டதாக தெரிவித்து அவரது உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று முன்தினம் மதியம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் ஆஸ்பத்திரி நிர்வாகம் பாலமுருகன் உயிரோடு இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பாலமுருகன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதைதொடர்ந்து பாலமுருகனின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து ஐகோர்ட்டிலும் வழக்கு தாக்கல் செய்தனர். போலீசார் தாக்கியதில் தான் வாலிபர் இறந்து விட்டதாக தகவல் பரவியதை தொடர்ந்து தேவர் அமைப்புகள் மற்றும் பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு நேற்று காலை வந்தனர். அவர்கள் இறந்த பாலமுருகனின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் இறந்த பாலமுருகனை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு தொகை, தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை பாலமுருகனின் உடலை வாங்க மாட்டோம் என்று பெற்றோர் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன்தேவாசீர்வாதம் விரைந்து வந்தார். அவர் பாலமுருகனின் பெற்றோரிடம் இதுகுறித்து புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தனர்.

இதற்கிடையில் கோர்ட்டு உத்தரவின் பேரில் நீதிபதி முன்னிலையில் பாலமுருகனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் கோர்ட்டு தெரிவித்ததன் படி பாலமுருகனின் பெற்றோர் மதுரை மாவட்ட கலெக்டரிடம் புகார் மற்றும் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதனை தொடர்ந்து நேற்று மாலை பாலமுருகனின் உடலை பெற்றோர் பெற்று கொண்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story